Thursday, July 25, 2013

திருமூலர் திருமந்திரம் 884-1703 நான்கு,ஐந்து,ஆறாம் தந்திரம்,4,5,6 Tantras



10ம் திருமுறை

திருமந்திரம் (திருமூலர் அருளியது)
நான்காம் தந்திரம் (884 - 1418)

சித்த ஆகமம்
1. அசபை

போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை
ஏற்றுகின் றேன்நம் பிரான்ஓர் எழுத்தே. 884.

ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி
ஈரெழுத் தாலே இசைந்துஅங்கு இருவராய்
மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாவெழுத் தாலே மயக்கமே உற்றதே. 885.

தேவர் உறைகின்ற சிற்றம் பலம்என்றுந்
தேவர் உறைகின்ற சிதம்பரம் என்றுந்
தேவர் உறைகின்ற திருஅம் பலமென்றுந்
தேவர் உறைகின்ற தென்பொது வாமே. 886.

ஆமே பொன் னம்பலம் அற்புதம் ஆனந்தம்
ஆமே திருக்கூத்து அனவரத் தாண்டவம்
ஆமே பிரளயம் ஆகும்அத் தாண்டவம்
ஆமேசங் காரத்து அருந்தாண் டவங்களே. 887.

தாண்டவ மான தனியெழுத்து ஓரெழுத்து
தாண்டவ மானது அனுக்கிரகத் தொழில்
தாண்டவக் கூத்துததனிநின்ற தற்பரம்
தாண்டவக் கூத்துத் தமனியந் தானே. 888.

தானே பரஞ்சுடர் தத்துவ மாய்நிற்கும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே பரஞ்சுடர் தத்துவக் கூத்துக்குத்
தானே தனக்குத் தராதலம் தானே. 889.

தராதல மூலைக்குத் தற்பர மாபரன்
தராதலம் வெப்பு நமசி வாயந்
தராதலம் சொல்லில் தான்வா சியவாகும்
தராதல யோகம் தயாவாசி யாமே. 890.

ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா இடம்என்ப
ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்த மாமே. 891.

ஆனந்த மூன்றும் அறிவுஇரண்டு ஒன்றாகும்
ஆனந்தம் சிவாய அறிவார் பலரில்லை
ஆனந்த மோடும் அறியவல் லார்கட்டு
ஆனந்தக் கூத்தாய் அகப்படும் தானே. 892.

படுவது இரண்டும் பலகலை வல்லார்
படுவது ஓங்காரம் பஞ்சாக் கரங்கள்
படுவது சங்காரத் தாண்டவப் பத்தி
படுவது கோணம் பரந்திடும் வாறே. 893.

வாறே சதாசிவ மாறிலா ஆகமம்
வாறே சிவகதி வண்டுறை புன்னையும்
வாறே திருக்கூத்து ஆகம வசனங்கள்
வாறே பொதுவாகும் மன்றின் அமலமே. 894.

அமலம் பதிபசு பாசங்கள் ஆகமம்
அமலம் திரோதாயி யாகுமா னந்தமாம்
அமலம் சொல் ஆணவம் மாயை காமியம்
அமலம் திருக்கூத்து ஆமிடம் தானே. 895.

தானே தனக்குத் தலைவனு மாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மலை யாய்நிற்கும்
தானே தனக்குத் தன்மய மாய்நிற்கும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே. 896.

தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்
தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்
தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்
தலைவனு மாய்நின்ற தாளிணை தானே. 897

இணையார் திருவடி எட்டெழுத் தாகும்
இணையார் கழலிணை ஈர்ஐஞ்ச தாகும்
இணையார் கழலிணை ஐம்பத் தொன்றாகும்
இணையார் கழலிணை ஏழா யிரமே. 898.

ஏழா யிரமாய் இருபதாய் முப்பதாய்
ஏழா யிரத்தும் ஏழுகோடி தானாகி
ஏழா யிரத்துயிர் எண்ணிலா மந்திரம்
ஏழா யிரண்டாய் இருக்கின்ற வாறே. 899.

இருக்கின்ற மந்திரம் ஏழா யிரமாம்
இருக்கின்ற மந்திரம் எத்திறம் இல்லை
இருக்கின்ற மந்திரம் சிவன்திரு மேனி
இருக்கின்ற மந்திரம் இவ்வண்ணம் தானே. 900.

தானே தனக்குத் தகுநட்டம் தானாகும்
தானே அகார உகாரம தாய்நிற்கும்
தானே ரீங்காரத் தத்துவக் கூத்துக்குத்
தானே உலகில் தனிநடந் தானே. 901.

நடம்இரண்டு ஒன்றே நளினம தாகும்
நடம்இரண்டு ஒன்றே நமன்செய்யும் கூத்துலயம்
நடம்இரண்டு ஒன்றே நகைசெயா மந்திரம்
நடம்சிவ லிங்கம் நலஞ்செம்பு பொன்னே. 902.

செம்பொன் ஆகும் சிவாய நமஎன்னில்
செம்பொன் ஆகத் திரண்டது சிற்பரம்
செம்பொன் ஆகும் ஸ்ரீயும் கிரீயுமெனச்
செம்பொன் ஆன திருஅம் பலமே. 903.

திருஅம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத்
திருஅம் பலமாக ஈராறு கீறித்
திருஅம் பலமாக இருபத்தைஞ் சாக்கித்
திருஅம் பலமாகச் செபிக்கின்ற வாறே. 904.

வாறே சிவாய நமச்சி வாயநம
வாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லை
வாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்
வாறே செபிக்கில் வரும்செம்பு பொன்னே. 905.

பொன்னான மந்திரம் புகலவும் ஒண்ணாது
பொன்னான மந்திரம் பொறிகிஞ்சு கத்தாகும்
பொன்னான மந்திரம் புகையுண்டு பூரிக்கிற்
பொன்னாகும் வல்லோர்க்கு உடம்பு பொற் பாதமே. 906.

பொற்பாதம் காணலாம் புத்திரர் உண்டாகும்
பொற்பாதத்து ஆணையே செம்புபொன் ஆயிடும்
பொற்பாதம் காணத் திருமேனி ஆயிடும்
பொற்பாத நன்னடம் சிந்தனை சொல்லுமே. 907.

சொல்லும் ஒருகூட்டில் புக்குச் சுகிக்கலாம்
நல்ல மடவார் நயத்துட னேவரும்
சொல்லினும் பாசச் சுடர்ப்பாம்பு நீங்கிடும்
சொல்லும் திருக்கூத்தின் சூக்குமம் தானே. 908.

சூக்குமம் எண்ணா யிரஞ்செபித் தாலும்மேல்
சூக்கும மான வழியிடைக் காணலாம்
சூக்கும மான வினையைக் கெடுக்கலாம்
சூக்கும மான சிவனதுஆ னந்தமே. 909.

ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென்று அறைந்திட
ஆனந்தம் ஆனந்தம் ஆஈஊஏஓம் என்று அறைந்திடும்
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சுமது ஆயிடும்
ஆனந்தம் ஆனந்தம் அம்ஹ்ரீம்அம் க்ஷம் ஆம்ஆகுமே. 910.

மேனி இரண்டும் விலங்காமல் மேற்கொள்ள
மேனி இரண்டும் மிகார விகாரியாம்
மேனி இரண்டும் ஊஆஈஏஓ என்று
மேனி இரண்டும் ஈஓஊஆஏ கூத்தாமே. 911.

கூத்தே சிவாய நமமசி வாயிடும்
கூத்தே ஈஊஆஏஓம் சிவாய நம வாயிடும்
கூத்தே ஈஊஆஏஓம் சிவயநம வாயிடும்
கூத்தே இஊஆஏஓம் நமசிவாய கோளொன்று மாறே. 912.

ஒன்றிரண்டு ஆடவோர் ஒன்றும் உடனாட
ஒன்றிரண்டு மூன்றாட ஓரேழும் ஒத்தாட
ஒன்றினில் ஆடவோர் ஒன்பதும் உடனாட
மன்றினில் ஆடனான் மாணிக்கக் கூத்தே. 913.

2.
திருஅம்பலச் சக்கரம்

இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகை
இருந்த இரேகைமேல் ஈராறு இருத்தி
இருந்த மனைகளும் ஈராறு பத்தொன்று
இருந்த மனையொன்றில் எய்துவன் தானே. 914.

தான்ஒன்றி வாழிடம் தன்எழுத் தேயாகும்
தான்ஒன்றும் அந்நான்கும் தன்பே ரெழுத்தாகும்
தான்ஒன்று நாற்கோணம் தன்ஐந் தெழுத்தாகும்
தான்ஒன்றி லேஒன்றும் அவ்அரன் தானே. 915.

அரகர என்ன அரியதொன்று இல்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும்பிறப்பு அன்றே. 916.

எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்
பட்டது மந்திரம் பான்மொழி யாலே. 917.

மட்fடவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவில் லாருயிர் காக்கவல் லாரே. 918.

ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்
ஆலய மாக அமர்ந்தஇத் தூலம்போய்
ஆலய மாக அறிகின்ற சூக்குமம்
ஆலய மாக அமர்ந்திருந் தானே. 919

இருந்த இவ்வட்டம் இருமூன்றுஇ ரேகை
இருந்த அதனுள் இரேகை ஐந்தாக
இருந்த அறைகள் இருபத்துஐஞ் சாக
இருந்த அறையொன்றில் எய்தும் அகாரமே. 920.

மகார நடுவே வளைத்திடும் சத்தியை
ஓகாரம் வளைத்திட்டு உம்பிளந்து ஏற்றி
அகாரம் தலையாய் இருகண் சிகாரமாய்
நகார வகாரநற் காலது நாடுமே. 921.

நாடும் பிரணவம் நடுஇரு பக்கமும்
ஆடும் அவர்வாய் அமர்ந்தங்கு நின்றது
நாடும் நடுவண் முகம்நம சிவாய
ஆடும் சிவாயநம புறவட்டத்து ஆயதே. 922.

ஆயும் சிவாய நமமசி வாயந
ஆயும் நமசிவா யயநம சிவா
வாயுமே வாய நமசியெனும் மந்திரம்
ஆயும் சிகாரம் தொட்டநதத் தடைவிலே. 923.

அடைவினில் ஐம்பதும் ஐஐந்து அறையின்
அடையும் அறையொன்றுக்கு ஈரெழுத்து ஆக்கி
அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே. 924.

அமர்ந்த அரகர வாம்புற வட்டம்
அமர்ந்த அரிகரி யாம் அதனுள் வட்டம்
அமர்ந்த அசபை யாம் அதனுள்வட்டம்
அமர்ந்தஇ ரேகையும் ஆகின்ற சூலமே. 925.

சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும்
சூலத் தலையினில் சூழும்ஓங் காரத்தால்
சூலத்து இடைவெளி தோற்றிடும் அஞ்செழுத்து
ஆலப் பதிக்கும் அடைவதும் ஆமே. 926.

அதுவாம் அகார இகார உகாரம்
அதுவாம் எகாரம் ஓகாரமது ஐந்தாம்
அதுவாகும் சக்கர வட்டமேல் வட்டம்
பொதுவாம் இடைவெளி பொங்குநம் பேரே. 927.

பேர்பெற் றதுமூல மந்திரம் பின்னது
சோர்வுற்ற சக்கர வட்டத்துள் சந்தியின்
நேர்பெற் றிருந்திட நின்றது சக்கரம்
ஏர்பெற் றிருந்த இயல்பிது வாமே. 928.

இயலும் இம் மந்திரம் எய்தும் வழியின்
செயலும் அறியத் தெளிவிக்கு நாதன்
புயலும் புனலும் பொருந்துஅங்கி மண்விண்
முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே. 929.

ஆறெட்டு எழுத்தின்மேல் ஆறும் பதினாலும்
ஏறிட்டு அதன்மேல் விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று சிவாய நமவென்னக்
கூறிட்டு மும்மலம் கூப்பிட்டுப் போமே. 930.

அண்ணல் இருப்பது அவள்அக் கரத்துளே
பெண்ணின்நல் லாளும் பிரானக் கரத்துளே
எண்ணி இருவர் இசைந்துஅங்கு இருந்திடப்
புண்ணிய வாளர் பொருளறி வார்களே. 931.

அவ்விட்டு வைத்தங்கு அரவிட்டு மேல்வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும்
மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின்
தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந்து ஆமே. 932.

அவ்வுண்டு சவ்வுண்டு அனைத்தும்அங்கு உள்ளது
கவ்வுண்டு நிற்கும் கருத்தறி வார்இல்லை
கவ்வுண்டு நிற்கும் கருத்தறி வாளர்க்குச்
சவ்வுண்டு சத்தி சதாசிவன் தானே. 933.

அஞ்செழுத் தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்செழுத் தாலே அமர்ந்தபஞ் சாக்கரம்
அஞ்செழுத் தாகிய வக்கர சக்கரம்
அஞ்செழுத் துள்ளே அமர்ந்திருந் தானே. 934.

கூத்தனைக் காணுங் குறிபல பேசிடில்
கூத்தன் எழுத்தின் முதலெழுத்து ஓதினார்
கூத்தனொடு ஒன்றிய கொள்கைய ராய்நிற்பர்
கூத்தனைக் காணும் குறியது வாமே. 935.

அத்திசைக் குள்நின்ற அனலை எழுப்பிய
அத்திசைக் குள்நின்ற நவ்எழுத்து ஓதினால்
அத்திசைக் குள்நின்ற அந்த மறையனை
அத்திசைக் குள்ளுற வாக்கினன் தானே. 936.

தானே அளித்திடும் தையலை நோக்கினால்
தானே அளித்திட்டு மேலுற வைத்திடும்
தானே அளித்த மகாரத்தை ஓதிடத்
தானே அளித்ததோர் கல்லொளி யாகுமே. 937.

கல்லொளி யேயென நின்ற வடதிசை
கல்லொளி யேயென நின்ற னன் இந்திரன்
கல்லொளி யேயென நின்ற சிகாரத்தைக்
கல்லொளி யேயெனக் காட்டிநின் றானே. 938.

தானே எழுகுணம் தண்சுட ராய்நிற்கும்
தானே எழுகுணம் வேதமு மாய்நிற்கும்
தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்
தானே எழுந்த மறையவன் ஆமே. 939.

மறைய வனாக மதித்த பிறவி
மறையவ னாக மதித்திக் காண்பர்
மறையவன் அஞ்செழுத்து உள்நிற்கப் பெற்ற
மறையவன் அஞ்செழுத்து தாம்அது வாகுமே. 940.

ஆகின்ற பாதமும் அந்நாவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்
ஆகின்ற சீயுரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே. 941.

அவ்வியல் பாய இருமூன்று எழுத்தையும்
செவ்வியல் பாகச் சிறந்தனன் நந்தியும்
ஒவ்வியல் பாக ஒளியுற நோக்கிடில்
பவ்வியல் பாகப் பரந்துநின் றானே. 942.

பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம்
வரந்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரம் சூழ்பகை போக
உரந்தரு மந்திரம் ஓமென்று எழுப்பே. 943.

ஓமென்று எழுப்பிதன் உத்தம நந்தியை
நாமென்று எழுப்பி நடுவெழு தீபத்தை
ஆமென்று எழுப்பிஅவ் வாறுஅறி வார்கள்
மாமன்று கண்டு மகிழ்ந்திருந் தாரே. 944.

ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்துஐந்தும்
பாகொன்றி நின்ற பதங்களில் வார்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத்து ஓரெழுத்து உள்நிற்கப்
யாகொன்றி நிற்கும் பராபரன் தானே. 945.

பரமாய அஞ்செழுத்து உள்நடு வாகப்
பரமாய நவசிவ பார்க்கில் மவயரசி
பரமாய சியநம வாம்பரத்து ஓதில்
பரமாய வாசி மயநமாய் நின்றே. 946.

நின்ற எழுத்துகள் நேர்தரு பூதமும்
நின்ற எழுத்துகள் நேர்தரு வண்ணமும்
நின்ற எழுத்துகள் நேர்தர நின்றிடில்
நின்ற எழுத்துள்ளும் நின்றனன் தானே. 947.

நின்றது சக்கரம் நீளும் புவியெல்லாம்
மன்றது வாய்நின்ற மாயநன் னாடனைக்
கன்றது வாகக் கறந்தனன் நந்தியும்
குன்றிடை நின்றிடும் கொள்கையன் ஆமே. 948.

கொண்டஇச் சக்கரத் துள்ளே குணம்பல
கொண்டஇச் சக்கரத் துள்ளே குறிஐந்து
கொண்டஇச் சக்கரங் கூத்தன் எழுத்துஐந்தும்
கொண்டஇச் சக்கரத் துள்நின்ற கூத்தே. 949

வெளியில் இரேகை இரேகையி லத்தலை
சுளியில் உகாரமாம் சுற்றிய வன்னி
நெளிதரும் கால்கொம்பு நோவிந்து நாதம்
தெளியும் பிரகாரம் சிவமந் திரமே. 950.

அகார உகார சிகார நடுவாய்
வகாரமோடு ஆறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவன்சிந்தை செய்ய
ஓகார முதல்வன் உவந்துநின் றானே. 951.

அற்ற இடத்தே அகாரமது ஆவது
உற்ற இடத்தே உறுபொருள் கண்டிடச்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்த பொன்போலும் குளிகையே. 952.

அவ்வென்ற போதினில் உவ்வெழுத் தாலித்தால்
உவ்வென்ற முத்தி உருகிக் கலந்திடும்
மவ்வென்று என்னுள்ளே வழிப்பட்ட நந்தியை
எவ்வணஞ் சொல்லுகேன் எந்தை இயற்கையே. 953.

நீரில் எழுத்துஇவ் வுலகர் அறிவது
வானில் எழுத்தொன்று கண்டறிவார் இல்லை
யாரிவ்f வெழுத்தை அறிவார் அவர்கள்
ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே. 954.

காலை நடுவுறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுவுற ஐம்பதும் ஆவன
மேலை நடுவுற வேதம் விளம்பிய
மூலம் நடுவுற முத்திதந் தானே. 955.

நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று
பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை
ஓவிய ராலும் அறியவொண் ணாத\து
தேவியும் தானும் திகழ்ந்திருந் தானே. 956.

அவ்வொடு சவ்வென்ற தரனுற்ற மந்திரம்
அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிகிலர்
அவ்வொடு சவ்வென்றது ஆரும் அறிந்தபின்
அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே. 957.

மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியின் உள்ளே உதயம்பண் ணாநிற்குஞ்
சந்திசெய் யாநிற்பர் தாமது அறிகிலர்
அந்தி தொழுதுபோய் ஆர்த்துஅகன் றார்களே. 958.

சேவிக்கு மந்திரம் செல்லும் திசைபெற
ஆவிக்குள் மந்திரம் ஆதார மாவன
பூவிக்குள் மந்திரம் போக்கற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குச மாமே. 959.

அருவினில் அம்பரம் அங்கெழு நாதம்
பெருகு துடியிடை பேணிய விந்து
மருவி யகார சிகார நடுவாய்
உருவிட ஊறும் உறுமந் திரமே. 960.

விந்துவும் நாதமும் மேவி யுடன்கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
அந்தர வானத்து அமுதம்வந்து ஊறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி யாமே. 961.

ஆறெழுத்து ஓதும் அறிவார் அறிகிலர்
ஆறெழுத்து ஒன்றாக ஓதி உணரார்கள்
வேறெழுத்து இன்றி விளம்பவல் லார்கட்கு
ஓரெழுத்தாலே உயிர்பெற லாமே. 962.

ஓதும் எழுத்தோடு உயிர்க்கலை மூவைஞ்சும்
ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்றென்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள் ளீரே. 963.

விந்துவி லும்சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவி பதினாறு கலையதாம்
சுந்தர வாகரங் கால்உடம்பு ஆயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்தொன்று ஆயதே. 964.

ஐம்பது எழுத்தே அனைத்தும்வே தங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்துஆக மங்களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்தபின்
ஐம்பது எழுத்தும்போய் அஞ்செழுத் தாமே. 965.

அஞ்செழுத் தால்ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்செழுத் தால்பல யோனி படைத்தனன்
அஞ்செழுத் தால்இவ் அகலிடம் தாங்கினன்
அஞ்செழுத் தாலே அமர்ந்து நின்றானே. 966.

வீழ்ந்தெழு லாம்விகிர் தன்திரு நாமத்தைச்
சோர்ந்தொழி யாமல் தொடங்கும் ஒருவற்குச்
சார்ந்த வினைத்துயர் போகத் தலைவனும்
போந்திடும் என்னும் புரிசடை யோனே. 967.

உண்ணும் மருந்தும் உலப்பிலி காலமும்
பண்ணுறு கேள்வியும் பாடலு மாய்நிற்கும்
விண்ணின்று அமரர் விரும்பி அடிதொழ
எண்ணின்று எழுத்துஅஞ்சும் ஆகிநின் றானே. 968.

ஐந்தின் பெருமையே அகலிடம் ஆவதும்
ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகைசெயப் பாலனும் ஆமே. 969

வேரெழத் தாய்விண்ணாய் அப்புறமாய் நிற்கும்
நீரெழுத் தாய்நிலந் தாங்கியும் அங்குளன்
சீரெழுத் தாய்அங்கி யாய்உயி ராம்எழுத்து
ஓரெழுத்து ஈசனும் ஓண்சுட ராமே. 970

நாலாம் எழுத்துஓசை ஞாலம் உருவது
நாலாம் எழுத்தினுள் ஞாலம் அடங்கியது
நாலாம் எழுத்தே நவிலவல் லார்கட்டு
நாலாம் எழுத்தது நன்னெறி தானே. 971.

இயைந்தனள் ஏந்திழை என்னுளம் மேவி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
பயந்தனை யோரும் பதமது பற்றும்
பெயர்ந்தனன் மற்றும் பிதற்றுஅறுத் தேனே. 972.

ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினை
ஓமத்தி லேயுதம் பண்ணும் ஒருத்திதன்
நாம நமசிவ என்றிருப் பாருக்கு
நேமத் தலைவி நிலவிநின் றாளே. 973.

பட்ட பரிசே பரமஞ் செழுத்ததின்
இட்டம் அறிந்திட்டு இரவு பகல்வர
நட்டமது ஆடும் நடுவே நிலையங்கொண்டு
அட்டதே சப்பொருள் ஆகிநின் றாளே. 974.

அகாரம் உயிரே உகாரம் பரமே
மகார மலமாய் வருமுப் பதத்தில்
சிகாரம் சிவமாய் வகாரம் வடிவமாய்
யகாரம் உயிரென்று அறையலும் ஆமே. 975.

நகார மகார சிகார நடுவாய்
வகாரம் இரண்டும் வளியுடன் கூடி
ஓகார முதற்கொண்டு ஒருக்கால் உரைக்க
மகார முதல்வன் மனத்தகத் தானே. 976.

அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூடத் தடுக்கவல் லார்கட்கே
அஞ்சாதி ஆதி அகம்புக லாமே. 977.

ஐந்து கலையில் அகராதி தன்னிலே
வந்த நகராதி மாற்றி மகராதி
நந்தியை மூலத்தே நாடிப் பரையொடும்
சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே. 978.

மருவும் சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த போகமும் ஞானமும் ஆகும்
தெருள்வந்த சீவனார் சென்றுஇவற் றாலே
அருள்தங்கி அச்சிவமம் ஆவது வீடே. 979.

அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்தபின்
நெஞ்சுகத்து உள்ளே நிலையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லை
தஞ்சம் இதுவென்று சாற்றுகின் றேனே. 980.

சிவாயவொடு அவ்வே தெளிந்துஉளத்து ஓதச்
சிவாயவொடு அவ்வே சிவனுரு வாகும்
சிவாயவொடு அவ்வும் தெளியவல் லார்கள்
சிவாயவொடு அவ்வே தெளிந்திருந் தாரே. 981

சிகார வகார யகார முடனே
நகார மகார நடுவுற நாடி
ஓகார முடனே ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மதித்துநின் றானே. 982.

நம்முதல் ஓர்ஐந்தின் நாடுங் கருமங்கள்
அம்முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சிம்முதல் உள்ளே தெளியவல் லார்கட்குத்
தம்முதல் ஆகும் சதாசிவந் தானே. 983.

நவமும் சிவமும் உயிர்பர மாகும்
தவமொன்று இலாதன தத்துவம் ஆகும்
சிவம்ஒன்றி ஆய்பவர்ஆதர வால்அச்
சிவம்என்ப தானாம் எனும்தெளி வுற்றதே. 984.

கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி
நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து
ஆடிய ஐவரும் அங்குஉறவு ஆவார்கள்
தேடி அதனைத் தெளிந்தறி யீரே. 985.

எட்டும் இரண்டும் இனிதுஅறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே. 986.

எட்டு வரையின்மேல் எட்டு வரைகீறி
இட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்
வட்டத்தி லேயறை நாற்பத்தெட் டும்இட்டுச்
சிட்டஞ் செழுத்தும் செபிசீக் கிரமே. 987.

தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆனஇம் மூவரோடு ஆற்றவர் ஆதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் செய்சிவ சக்கரந் தானே. 988.

பட்டனம் மாதவம் ஆறும் பராபரம்
விட்டனர் தம்மை விகிர்தா நமஎன்பர்
எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே 989.

சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண்டு ஒன்றொடுஒன்று ஆன
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே. 990.

வித்தாம் செகமய மாக வரைகீறி
நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்
உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலைதொரும்
பத்தாம் பிரம சடங்குபார்த்து ஓதிடே. 991.

கண்டெடுந் தேன்கம லம்மலர் உள்ளிடை
கொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப்
பண்டழி யாத பதிவழி யேசென்று
நண்பழி யாமே நமவென வாமே. 992.

புண்ணிய வானவர் பூமழை தூவிநின்று
எண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்
நண்ணுவர் நண்ணி நமஎன்று நாமத்தைக்
கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே. 993.

ஆறெழுத்தாவது ஆறு (1)மந்திரங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலையெழுத்து ஒன்றுள
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே. 994.

1
சமயங்கள்
எட்டினில் எட்டறை யிட்டு அறையிலே
கூட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச்
சுட்டி இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டு
மட்டும் உயிர்கட்டு உமாபதி யானுண்டே. 995.

நம்முதல் அவ்வொடு நாவினர் ஆகியே
அம்முதல் ஆகிய எட்டிடை யுற்றிட்டு
உம்முதல் ஆகவே உணர்பவர் உச்சிமேல்
உம்முதல் ஆயவன் உற்றுநின் றானே. 996.

தம்பனம்
நின்ற அரசம் பலகைமேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையிற் சாதகம்
துன்று மெழுகையுள் புசிச் சுடரிடைத்
தன்ற வெதுப்பிடத் தம்பனங் காணுமே. 997.

மோகனம்
கரண இரளிப் பலகை யமன்திசை
மரணம் இட்டு எட்டின் மகார எழுத்திட்டு
வரணமில் ஐங்காயம் பூசி அடுப்பிடை
முரணிற் புதைத்திட மோகன மாகுமே. 998.

உச்சாடனம்
ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
பாங்கு படவே பலாசப் பலகையில்
காங்கரு மேட்டில் கடுப்பூசி விந்துவிட்டு
ஓங்காமல் வைத்திடும் உச்சாட னத்துக்கே. 999.

மாரணம்
உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில்
பச்சோலை யில் பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திட
அச்சமற மேலோர் மாரணம் வேண்டிலே. 1000

ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசி
ஏய்ந்த அகாரம் உகாரம் எழுத்திட்டு
வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்கு
ஏய்ந்தவைத்து எண்பதி னாயிரம் வேண்டிலே. 1001.

ஆகர்ஷணம்
எண்ணாக் கருடனை ஏட்டில் உகாரமிட்டு
எண்ணாப் பொனefனாளிf எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவல் பலகையில் இட்டுமேற் கேநோக்கி
எண்ணா எழுத்தோடுஎண்ணாயிரம் வேண்டிலே. 1002.

3.
அருச்சனை

அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
தும்பை வகுளம் சுரபுனனை மல்லிகை
செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே. 1003.

சாங்கம தாகவே சந்தொடு சந்தனம்
தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில்
பாங்கு படப்பனி நீரால் குழைத்துவைத்து
ஆங்கே அணிந்துநீர் அர்ச்சியும் அன்பொடே. 1004.

அன்புடனே நின்று அமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகைதீபம் திசைதொறும்
துன்பம் அகற்றித் தொழுவோர் நினையுங்கால்
இன்புட னேவந்து எய்திடும் முத்தியே. 1005.

எய்தி வழிப்படில் எய்தா தனஇல்லை
எய்தி வழிப்படில் இந்திரன் செல்வமுன்
எய்தி வழிப்படில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிப்படில் எய்திடும் முத்தியே. 1006.

நண்ணும் பிறதார நீத்தார் அவித்தார்
மண்ணிய நைவேத் தியம்அனு சந்தான
நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபமென்னும்
மன்னும் மனம்பவ னத்தோடு வைகுமே. 1007.

வேண்டார்கள் கன்மம் விமலனுக்கு ஆட்பட்டோ ர்
வேண்டார்கள் கன்மம் அதில்இச்சை அற்றபேர்
வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்
வேண்டார்கள் கன்மம் மிகுதியோர் ஆய்ந்தன்பே. 1008.

அறிவரு ஞானத்து எவரும் அறியார்
பொறிவழி தேடிப் புலம்புகின்றார்கள்
நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்
எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே. 1009.

இருளும் வெளியும்போல் இரண்டாம் இதயம்
மருளறி யாமையும் மன்னும் அறிவு
மருளிவை விட்டெறி யாமை மயங்கும்
மருளும் சிதைத்தோர் அவர்களாம் அன்றே. 1010.

தான்அவ னாக அவனேதான் ஆயிட
ஆன இரண்டில் அறிவன் சிவமாகப்
போனவன் அன்பிது நாலாம் மரபுறத்
தான்அவன் ஆகும்ஓ ராசித்த தேவரே. 1011.

ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள்கண்டத்து ஆயிடும்
பாங்கார் நகாரம் பயில்நெற்றி உற்றிடும்
வீங்காகும் விந்துவும் நாதமே லாகுமே. 1012.

நமவது ஆசனம் ஆன பசுவே
சிவமது சித்திச் சிவமாம் பதியே
நமவற ஆதி நாடுவது அன்றாம்
சிவமாகும் மாமோனம் சேர்தல்மெய் வீடே. 1013.

தெளிவரு நாளில் சிவஅமுது ஊறும்
ஒளிவரு நாளில் ஓர்ஏட்டில் உகளும்
ஒளிவரும் அப்பதத்து ஓர் இரண்டு ஆகில்
வெளிதரு நாதன் வெளியாய் இருந்தே. 1014.

4.
நவகுண்டம்

நவகுண்டம் ஆனவை நான்உரை செய்யின்
நவகுண்டத்து உள்ளெழும் நற்றீபம் தானும்
நவகுண்டத்து உள்ளெழும் நன்மைகள் எல்லாம்
நவகுண்டம் ஆனவை நான்உரைப் பேனே. 1015.

உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும்
நகைத்தெழு நாற்கோணம் நன்மை கள்ஐந்தும்
பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடே
மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே. 1016.

மேலெறிந்து உள்ளே வெளிசெய்த அப்பொருள்
கால்அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர்
பார்அறிந்து அண்டம் சிறகற நின்றது
நான்அறிந்து உள்ளே நாடிக்கொண் டேனே. 1017.

கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியாய்
அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம்
பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்
இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே. 1018.

எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில்
பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே
கொதித்தெழும் வல்லினை கூடகி லாவே. 1019.

கூடமுக் கூடத்தின் உள்ளெழு குண்டத்துள்
ஆடிய ஐந்தும் அகம்புறம் பாய்நிற்கும்
பாடிய பன்னீர் இராசியும் அங்குஎழ
நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே. 1020.

நற்சுட ராகும் சிரமுக வட்டமாம்
கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளிற்
பைச்சுடர் மேனி பதைப்பற்று இலிங்கமும்
நற்சுட ராய்எழு நல்லதென் றாளே. 1021.

நல்லதென் றாளே நமக்குற்ற நாயகம்
சொல்லதென் றாளே சுடர்முடி பாதமோ
மெல்லநின் றாளை வினவகில் லாதவர்
கல்லதென் றாளையும் கற்றும் வின் வாளே. 1022.

வின்னா விளம்பிறை மேவிய குண்டத்துச்
சொன்னால் இரண்டும் சுடர்நாகம் திக்கென்று
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என்ஆகத் துள்ளே இடங்கொண்ட வாறே. 1023.

இடங்கொண்ட பாதம் எழிற்சுடர் ஏக
நடங்கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்குச்
சுகங்கொண்ட கையிரண்டு ஆறும் தழைப்ப
முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே. 1024.

முக்கணன் தானே முழுச்சுடர் ஆயவன்
அக்கணன் தானே அகிலமும் உண்டவன்
திக்கணன் ஆகித் திகைஎட்டும் கண்டவன்
எக்கணன் தானுக்கும் எந்தை பிரானே. 1025.

எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த்
தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங்கு இருந்தலான்
மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே. 1026.

மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள்
ஆட்டிய காலொன்றும் இரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கையிரண்டு ஒன்று பதைத்தெழு
நாட்டும் சுரரிவர் நல்லொளி தானே. 1027.

நல்லொளி யாக நடந்துல கெங்கும்
கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும்
சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம்
கல்லொளி கண்ணுள மாகிநின் றாளே. 1028.

நின்றஇக் குண்டம் நிலையாது கோணமாய்ப்
பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறும்
கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழ
விண்ணுளம் என்ன எடுக்கலு மாமே. 1029.

எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தைக்
கடுத்த முகம்இரண்டு ஆறுகண் ஆகப்
படித்துஎண்ணும் நாவெழு கொம்பொரு நாலும்
அடுத்தெழு கண்ணான தந்தமி லாற்கே. 1030.

அந்தமில் லானுக்கு அகலிடம் தானில்லை
அந்தமில் லானை அளப்பவர் தாமில்லை
அந்தமில் லானுக்கு அடுத்தசொல் தானில்லை
அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே. 1031.

பத்திட்டுஅங்கு எட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகவும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே. 1032.

பார்ப்பதி பாகன் பரந்தகை நால்ஐஞ்சு
காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்
பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி
நாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே. 1033.

அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐஐந்தம்
மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங்கு இருத்தலால்
பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்
கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே. 1034.

முத்திநற் சோதி முழுச்சுடர் ஆயவன்
கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்றற நாடிப் பரந்தொளி யூடு போய்ச்
செற்றற்து இருந்தவர் சேர்ந்திருந் தாரே. 1035.

சேர்ந்த கலையஞ்சும் சேரும்இக் குண்டமும்
ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே. 1036.

மெய்கண்ட மாம்விரி நீருல கேழையும்
உய்கண்டம் செய்த ஒருவனைச் சேருமின்
செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள்
பொய்கண்டம் இல்லாப் பொருள்கலந் தாரே. 1037.

கலந்திரு பாதம் இருகர மாகும்
மலர்ந்திரு குண்ட மகாரத்தார் மூக்கு
மலர்ந்தெழு செம்முகம் மற்றைக்கண் நெற்றி
உணர்ந்திரு குஞ்சி அங்கு உத்தம னார்க்கே. 1038.

உத்தமன் சோதி உளனொரு பாலனாய்
மத்திம னாகி மலர்ந்தங்கு இருந்திடும்
பச்சிம திக்கும் பரந்து குழிந்தன
சத்திமா னாகத் தழைத்த கொடியே. 1039.

கொடியாறு சென்று குலாவிய குண்டம்
அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
படிஏழ் உலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதன மாமே. 1040.

மாதன மாக வளர்கின்ற வன்னியைச்
சாதன மாகச் சமைந்த குருவென்று
போதன மாகப் பொருந்த உலகாளும்
பாதன மாகப் பரிந்தது பார்த்தே. 1041.

பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை
ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார் இல்லை
காத்துடல் உள்ளே கருதி இருந்தவர்
மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே. 1042.

உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும்
பகங்கண்டு கொண்டஇப் பாய்கரு வொப்பச்
சகங்கண்டு கொண்டது சாதன மாமே. 1043.

சாதனை நாலு தழல்மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளையாறு பூநிலை
போதனை போதுஐஞ்சு பொய்கய வாரணம்
நாதனை நாடு நவகோடி தானே. 1044.

5.
சத்தி பேதம் - திரிபுரை சக்கரம்

மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை உள்ளொளி ஓராறு கோடியில்
தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள்
ஆமாய் அலவாந் திரிபுரை யாங்கே. 1045.

திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
பரிபுரை நாரணி யாம்பல வன்னத்தி
இருள்புரை ஈசி மனோன்மனி என்ன
வருபல வாய்நிற்கும் மாமது தானே. 1046.

தானா அமைந்தஅம் முப்புரம் தன்னிடைத்
தானான மூவுரு ஓருருத் தன்மையுள்
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே. 1047.

நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள்
பல்கும் பரவிந்து பாரண்ட மானவை
நல்கும் பரைஅபி ராமி அகோசரி
புல்கும் அருளும்அப் போதந்தந் தாளுமே. 1048.

தாளணி நூபுரம் செம்பட்டுத் தானுடை
வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்
ஏரணி அங்குச பாசம் எழில்முடி
காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே. 1049.

குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்
கொண்ட அரத்த நிறமன்னு கோலத்தள்
கண்டிகை ஆரம் கதிர்முடி மாமதிச்
சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே. 1050.

நின்ற திரிபுரை நீளும் புராதனி
குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை
நன்றறி கண்டிகை நாற்கால் கரீடணி
துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே. 1051.

சுத்தவம்பு ஆரத் தனத்தி சுகோதயள்
வத்துவம் ஆய்ஆ ளும்மாத்தி மாபரை
அத்தகை யான மனஆரணி தானுமாய்
வைத்தஅக் கோல மதியவள் ஆகுமே. 1052.

அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே. 1053.

அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்
அறிவா ரருவுரு வாம்அவள் என்பர்
அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்
அறிவார் பரனும் அவளிடத் தானே. 1054.

தான்எங்கு உளன்அங்கு உளதுதையல் மாதேவி
ஊன்எங் குள அங்கு உள்ளுயிர்க் காலவன்
வான் எங் குளஅங் குளேவந்தும் அப்பாலாம்
கோன் எங்கும் நின்ற குறிபல பாரே. 1055.

பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்
தராசத்தி யாய்நின்ற தன்மை யுணராய்
உராசத்தி ஊழிகள் தோறும் உடனே
பராசத்தி புண்ணிய மாகிய போகமே. 1056.

போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும்
பாகஞ்செய்து ஆங்கே பராசத்தி யாய்நிற்கும்
ஆகஞ்செய்து ஆங்கே அடியவர் நாள்தொறும்
பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே. 1057.

கொம்புஅனை யாளைக் குவிமுலை மங்கையை
வம்பவிழ் கோதையை வானவிர் நாடியைச்
செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை
நம்பி என் உள்ளே நயந்துவைத் தேனே. 1058.

வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்
பத்து முகமும் பரையும் பராபரைச்
சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்
சத்தியும் வித்தைத் தலையவ ளாமே. 1059.

தலைவி தடமுலை மேல்நின்ற தையல்
தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை
கலைபல வென்றிடும் கன்னியென் உள்ளம்
நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே. 1060.

நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற
என்றன் அகம்படிந்து ஏழுல கும்தொழ
மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி
ஒன்றெனொடு ஒன்றிநின்று ஒத்துஅடைத்தாளே. 1061.

ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே. 1062.

உணர்ந்துட னேநிறகும் உள்ளொளி யாகி
மணங்கமழ் பூங்குழல் மங்கையும் தானும்
புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்
கணிந்தெழு வார்க்குக் கதியளிப் பாளே. 1063.

அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
புளியுறு புன்பழம் போலுள்ளே நோக்கித்
தெளியுறு வித்துச் சிவகதி காட்டி
ஒளியுற வைத்தென்னை உய்யவுண் டாளே. 1064.

உண்டில்லை என்றது உருச்செய்து நின்றது
வண்தில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது
கண்டிலர் காரண காரணி தம்மொடு
மண்டல முன்றுற மன்னிநின் றாளே. 1065.

நின்றாள் அவன்தன் உடலும் உயிருமாய்ச்
சென்றான் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுள் புகுந்துணர் வாகியே
நின்றான் பரஞ்சுடர் ஏடங்கை யாளே. 1066.

ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி
வேடம் படிகம் விரும்பும்வெண் தாமரை
பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்
சூடுமின் சென்னிவாய்த் தோத்திரம் சொல்லுமே. 1067.

தோத்திரம் செய்து தொழுது துணையடி
வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிடும்
பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும்
பார்த்திடும் பூம்பிள்ளை ஆருமாம் ஆதிக்கே. 1068.

ஆதி விதமிகுத் தண்தந்த மால்தங்கை
நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்
பாதியில் வைத்துப் பல்காற் பயில்விரல்
சோதி மிகுந்துமுக் காலமும் தோன்றுமே. 1069.

மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல்
வேதாதி நூலின் விளங்கும் பராபரை
ஆதார மாகியே ஆயந்த பரப்பினள்
நாதாதி நாதத்து நல்லரு ளாளே. 1070.

அருள்பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர்
பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்
மருளுற்ற சிந்தையை மாற்றி யருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவன் நானே. 1071.

ஆன வராக முகத்தி பதத்தினள்
ஈன வராகம் இடிக்கும் முசலத்தோடு
ஏனை உழுபடை ஏந்திய வெண்ணகை
ஊன மறஉணர்ந் தாரஉளத்து ஓங்குமே. 1072.

ஓங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை
நீங்காத பச்சை நிறத்தை உடையவள்
ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு
ரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே. 1073.

தானே தலைவி எனநின்ற தற்பரை
தானே உயிர்வித்துத் தந்த பதினாலும்
வானோர் தலமும் மனமும்நற் புத்தியும்
தானே சிவகதி தன்மையும் ஆமே. 1074.

6.
வயிரவி மந்திரம்

பன்னிரண் டாங்கலை ஆதி பயிரவி
தன்னில் ஆகாரமும் மாயையும் கற்பித்துப்
பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும்
சொல்நிலை சோடம் அந்தம் என்று ஓதிடே. 1075.

அந்தம் பதினாலும் அதுவே வயிரவி
முந்து நடுவும் முடிவும் முதலாகச்
சிந்தை கமலத்து எழுகின்ற மாசத்தி
அந்தமும் ஆதியும் ஆகின்றாளே. 1076.

ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சாரவுழிச் சாரார் சதிர்பெறப்
போகுந் திரிபுரை புண்ணியத் தோரே. 1077.

புண்ணிய நந்தி புனிதன் திருவாகும்
எண்ணிய நாட்கள் இருபத்தேழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதியீறு
திண்ணிய சிந்தைதன் தென்னனும் ஆமே. 1078.

தென்னன் திருநந்தி சேவகன் தன்னொடும்
பொன்னங் கிரியில் பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி அந்தம் பகவனோடு
உன்னும் திரிபுரை ஓதிநின் றானுக்கே. 1079.

ஓதிய நந்தி உணரும் திருவருள்
நீதியில் வேத நெறிவந்து உரைசெய்யும்
போதம் இருபத்து எழுநாள் புணர்மதி
சோதி வயிரவி சூலம்வந்து ஆளுமே. 1080.

சூலம் கபாலம் கை ஏந்திய சூலிக்கு
நாலாங் கரமுள நாகபா சாங்குச
மாலங் லயனறி யாத வடிவுக்கு
மேல்அங்க மாய்நின்ற மெல்லிய லாளே. 1081.

மெல்லியல் வஞ்சி விடமி கலைஞானி
சொல்லிய கிஞ்சுக நிறமன்னு சேயிழை
கல்லியல் ஒப்fபது காணும் திருமேனி
பல்லியல் ஆடையும் பன்மணி தானே. 1082.

பன்மணி சந்திர கோடி திருமுடி
சொன்மணி குண்டலக்காதி உழைக்கண்ணி
நன்மணி சூரிய சோம நயனத்தள்
பொன்மணி வன்னியும் பூரிக்கின் றாளே. 1083.

பூரித்த பூவிதழ் எட்டினுக்கு உள்ளேயோர்
ஆரியத் தாள்உண்டுஅங்கு எண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்
சாரித்துத் சத்தியைத் தாங்கள் கண்டாரே. 1084.

கண்ட சிலம்பு வளைசங்கு சக்கரம்
எண்டிசை யோகி இறைவி பராசக்தி
அண்டமோடு எண்டிசை தாங்கும் அருட்செல்வி
புண்டரி கத்தினுள் பூசனை யாளே. 1085.

பூசனை கெந்தம் புனைமலர் மாகொடி
யோசனை பஞ்சத்து ஒலிவந்து உரைசெய்யும்
வாசம்இ லாத மணிமந் திரயோகம்
தேசம் திகழும் திரிபுரை காணே. 1086.

காணும் பலபல தெய்வங்கள் வெவ்வேறு
பூணும் பலபல பொன்போலத் தோற்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணும் தலைவிநற் காரணி காணே. 1087.

காரணி மந்திரம் ஓதுங் கமலத்துப்
பூரண கும்ப விரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடுஅங்கு உரைசெய்த
ஆரண வேதநூல் அந்தமும் ஆமே. 1088.

அந்த நடுவிரல் ஆதி சிறுவிரல்
வந்த வழிமுறை மாறி உரை செய்யும்
செந்தமிழ் ஆதி தெளிந்து வழிபடு
நந்தி இதனை நவம் உரைத்தானே. 1089.

உரைத்த நவசத்தி ஒன்று முடிய
நிரைத்த இராசி நெடுமுறை எண்ணிப்
பிரைச்சதம் எட்டுமுன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமம்செய் தானே. 1090.

தாமக் குழலி தயைக்கண்ணி உள்நின்ற
ஏமத்து இருளற வீசும் இளங்கொடி
ஓமப் பெருஞ்சுடர் உள்எழு நுண்புகை
மேவித்து அழுதொடு மீண்டது காணே. 1091.

காணும் இருதய மந்திர முங்கண்டு
பேணும் நமஎன்று பேசும் தலைமேலே
வேணு நடுவு மிகநின்ற ஆகுதி
பூணு நடுஎன்ற அந்தம் சிகையே. 1092.

சிகைநின்ற அந்தக் கவசங்கொண்டு ஆதிப்
பகைநின்ற அங்கத்தைப் பாரென்று மாறித்
தொகைநின்ற நேத்திர முத்திரை சூலம்
வகைநின்ற யோனி வகுத்தலும் ஆமே. 1093.

வருத்தம் இரண்டும் சிறுவிரன் மாறிப்
பொருந்தி அணிவிரல் சுட்டிப் பிடித்து
நெரித்தொன்ற வைத்து நெடிது நடுவே
பெருத்த விரல்இரண்டு உள்புக்குப் பேசே. 1094.

பேசிய மந்திரம் இராகம் பிரித்துரை
கூசமி லாத சகாரத்தை முன்கொண்டு
வாசிப் பிராணன் உபதேசம் ஆகைக்குக்
கூசியவிந்து வுடன் கொண்டு கூவே. 1095.

கூவிய சீவன் பிராணன் முதலாகப்
பாவிய சவ்வுடன் பண்ணும் யகாரத்தை
மேவிய மாயை விரிசங்கு முத்திரை
தேவி நடுவுள் திகழ்ந்துநின் றாளே. 1096.

நின்ற வயிரவி நீலி நிசாசரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்றருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்றருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே. 1097.

சாற்றிய வேதம் சராசரம் ஐம்பூதம்
நாற்றிசை முக்கண்ணி நாடும் இருள்வெளி
தோற்றும் உயிர்ப்பன்மை சோதி பராபரை
ஆற்றலொடு ஆய்நிற்கும் ஆதி முதல்வியே. 1098.

ஆதி வயிரவி கன்னித் துறைமன்னி
ஓதி உணரில் உடலுயிர் ஈசனாம்
பேதை உலகிற் பிறவிகள் நாசமாம்
ஓத உலவாக் கோலம் ஒன்று ஆகுமே. 1099.

கோலக் குழவி குலாய புருவத்துள்
நீலக் குவளை மலரன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன்னமுது ஆனந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப்படுத் தாளே. 1100.

வெளிப்படு வித்து விளைவுஅறி வித்துத்
தெளிப்படு வித்துஎன் சிந்தையின் உள்ளே
களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி
ஒளிப்படு வித்துஎன்னை உய்ய்க்கொண்டாளே. 1101.

கொண்டனள் கோலங் கோடி அநேகங்கள்
கண்டனள் எண்ணென் கலையின் கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல்நின்ற தையல் நல் லாளே. 1102.

தையல் நல் லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப்
பையநின் றேத்திப் பணிமின் பணிந்தபின்
வெய்ய பவம்இனி மேவகி லாவே. 1103.

வேயன தோளி விரையுறு மென்மலர்
ஏய குழலி இளம்பிறை ஏந்திழை
தூய கடைமுடிச் சூலினி சுந்தரி
ஏயெனது உள்ளத்து இனிதுஇருந் தாளே. 1104.

இனியதென் மூலை இருக்குங் குமரி
தனியொரு நாயகி தானே தலைவி
தனிப்படு வித்தனள் சார்வு படுத்து
நனிப்படு வித்துள்ளம் நாடிநின் றாளே. 1105.

நாடிகள் மூன்று நடுஎழ ஞானத்துக்
கூடி யிருந்த குமரி குலக்கன்னி
பாடகச் சீறடிப் பைம்பொற் சிலம்பொலி
ஊடக மேவி உறங்குகின் றாளே. 1106.

உறங்கும் அளவில் மனோன்மணி வந்து
கறங்கும் வளைக்கைக் கழுத்தாரப் புல்லிப்
பிறங்கொளித் தம்பலம் வாயில் உமிழ்ந்திட்டு
உறங்கல்ஐ யாஎன்று உபாயம்செய் தாளே. 1107.

உபாயம் அளிக்கும் ஒருத்தியென் உள்ளத்து
அபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்துச்
சுவாவை விளக்கும் சுழியாகத் துள்ளே
அவாவை அடக்கிவைத்து அஞ்சல்என் றாளே. 1108

அஞ்சொல் மொழியாள் அருந்தவப் பெண்பிள்ளை
செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை
தஞ்சமென்று எண்ணித்தன் சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவியென் றாரே. 1109.

ஆருயி ராயும் அருந்தவப் பெண்பிள்ளை
காரியல் கோதையுள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரியென் உள்ளம் குலாவிநின் றாளே. 1110.

குலாவிய கோலக் குமரியென் னுள்ளம்
நிலாவி யிருந்து நெடுநாள் அணைந்தும்
உலாவி இருந்துணர்ந்து உச்சியின் உள்ளே
கலாவி இருந்த கலைத்தலை யாளே. 1111.

கலைத்தலை நெற்றியோர் கண்ணுடைக் கண்ணுள்
முலைத்தலை மங்கை முயங்கி இருக்கும்
சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி
அலைத்தபூங் கொம்பினள் அங்கிருந் தாளே. 1112.

இருந்தனள் ஏந்திழை என்னுள்ளம் மேவிப்
பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித்
திருந்திய தாணுவில் சேர்ந்துடன் ஒன்றி
அருந்தவம் எய்தினள் ஆதியி னாளே. 1113.

ஆதி அனாதி அகாரணி காரணி
சோதிய சோதி சுகபர சந்தரி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதிஎன் உள்ளத்து உடன்இயைந் தாளே. 1114.

இயைந்தனள் ஏந்திழை என்உள்ளம் மேலி
நயந்தனள் அங்கே நமசிவ என்னும்
அயன்தனை ஓரும் பதமது பற்றும்
பெயர்ந்தனள் மற்றும் பிதற்றுஅறுத் தாளே. 1115.

பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முற்றி அருளும் முதல்வி
கயற்றிகழ் முக்கண்ணுங் கம்பலைச் செவ்வாய்
முகத்தருள் நோக்கமும் முன்னுள்ள தாமே. 1116.

உள்ளத்து இதயத்து நெஞ்சத்தொரு மூன்றுள்
பிள்ளைத் தடம்உள்ளே பேசப் பிறந்தது
வள்ளல் திருவின் வயிற்றுனுள் மாமாயைக்
கள்ள ஒளியின் கருத்தாகுங் கன்னியே. 1117.

கன்னியுங் கன்னி அழிந்தனள் காதலி
துன்னியங fகைவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நன்னூற் பகவரும் அங்குள
என்னேஇம் மாயை இருளது தானே. 1118.

இருளது சத்தி வெளியதுஎம் அண்ணல்
பொருளது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருளது சிந்தையைத் தெய்வம்என்று எண்ணில்
அருளது செய்யும்எம் ஆதிப் பிரானே. 1119.

ஆதி அனாதியும் ஆய பராசக்தி
பாதிபராபரை மேலுறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதும்என் உள்ளத்து உடன்முகிழ்த் தாளே. 1120.

ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதியில் வேதமே யாம்என்று அறிகிலர்
சாதியும் பேதமும் தத்துவ மாய்நிற்பன்
ஆதியென்று ஓதினள் ஆவின் கிழத்தியே. 1121.

ஆவின் கிழத்திநல் ஆவடு தண்துறை
நாவின் கிழத்தி நலம்புகழ்ந்து ஏத்திடும்
தேவின் கிழத்தி திருவாம் சிவமங்கை
மேவும் கிழத்தி வினைகடிந் தாளே. 1122.

வினைகடிந் தார்உள்ளத்து உள்ளொளி மேவித்
தனைஅடைந் தோர்க்கெல்லாம் தத்துவ மாய்நிற்பள்
எனைஅடிமை கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனைக் காண அனாதியும் ஆமே. 1123.

ஆதி அனாதி அகாரணி காரணி
வேதமது ஆய்ந்தனள் வேதியர்க் காய்நின்ற
சோதி தனிச்சுடர் சொரூபமாய் நிற்கும்
பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே. 1124.

7.
பூரண சக்தி

அளந்தேன் அகலிடத்து அந்தமும் ஈறும்
அளந்தேன் அகலிடத்து ஆதிப் பிரானை
அளந்தேன் அகலிடத்து ஆணொடு பெண்ணும்
அளந்தேன் அவனருள் ஆய்ந்துணர்ந் தேனே. 1125.

உணர்ந்திலர் ஈசனை ஊழிசெய் சக்தி
புணர்ந்தது பூரணம் புண்ணியர் தங்கள்
கணங்களைத் தன்னருள் செய்கின்ற கன்னி
கொணர்ந்த வழிகொண்டு கும்பகமாமே. 1126.

கும்பக் களிறுஐந்தும் கோலொடு பாகனும்
வம்பில் திகழும் மணிமுடி வண்ணனும்
இன்பக் கலவி இனிதுறை தையலும்
அன்பிற் கலவியுள் ஆயொழிந் தாரே. 1127.

இன்பக் கலவியில் இட்டொழு கின்றதோர்
அன்பிற் புகவல்ல னாம்எங்கள் அப்பனும்
துன்பக் குழம்பில் துயருறும் பாசத்துள்
என்பிற் பாரசக்தி என்னம்மை தானே. 1128.

என்னம்மை என்னப்பன் என்னும் செருக்கற்று
உன்னம்மை ஊழித் தலைவனும் அங்குளன்
மன்னம்மை யாகி மருவி உரைசெய்யும்
பின்னம்மை யாய்நின்ற பேர்நந்தி தானே. 1129.

தார்மேல் உறைகின்ற தண்மலர் நான்முகன்
பார்மேல் இருப்பதொரு நூறு தானுள
பூமேல் உறைகின்ற போதகம் வந்தனள்
நாமேல் உறைகின்ற நாயகி ஆணையே. 1130.

ஆணையமாய்வருந் தாதுள் இருந்தவர்
மாணைய மாய மனத்தை ஒருக்கிப்பின்
பாணைய மாய பரத்தை அறிந்தபின்
தாணைய மாய தானதனன் தானே. 1131.

தானே எழுந்தஇத் தத்துவ நாயகி
வானோர் எழுந்து மதியை விளக்கினள்
தேனார் எழகின்ற தீபத்து ஒளியுடன்
மானே நடமுடை மன்றறி யீரே. 1132.

அறிவான மாயையும் ஐம்புலக் கூட்டத்து
அறிவான மங்கை அருளது சேரில்
பிரியா அறிவறி வார்உளம் பேணும்
நெறியாய சித்த நிறைந்திருந் தாளே. 1133.

இரவும் பகலும் இலாத இடத்தே
குரவம் செய்கின்ற குழலியை நாடி
அரவம்செய் யாமல் அருளுடன் தூங்கப்
பருவம்செய் யாததோர் பாலனும் ஆமே. 1134.

பாலனும் ஆகும் பராசத்தி தன்னோடு
மேலனு காவிந்து நாதங்கள் விட்டிட
மூலம தாமெனும் முத்திக்கு நேர்படச்
சாலவு மாய்நின்ற தற்பரத் தானே. 1135.

நின்ற பராசக்தி நீள்பரன் தன்னோடு
நின்றறி ஞானமும் இச்சையு மாய் நிற்கும்
நன்றறி யும்கிரி யாசக்தி நண்ணவே
மற்றன வற்றுள் மருவிடுந் தானே. 1136.

மருவொத்த மங்கையும் தானும் உடனே
உருவொத்துநின்றமை ஒன்றும் உணரார்
கருவொத்து நின்று கலக்கின போது
திருவொத்த சிந்தைவைத்து எந்தைநின் றானே. 1137.

சிந்தையின் உள்ளே திரியும் சிவசத்தி
விந்துவும் நாதமும் ஆயே விரிந்தனள்
சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தமொடு ஆதிய தாம்வண் ணத்தாளே. 1138.

ஆறி யிருந்த அமுத பயோதரி
மாறி யிருந்த வழியறி வாரில்லை
தேறி யிருந்துநல் தீபத்து ஒளியுடன்
ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே. 1139.

உடையவன் அங்கி உருத்திர சோதி
விடையவன் ஏறி விளங்கி இருக்கும்
கடையவர் போயிடும் கண்டவர் நெஞ்சத்து
அடையது வாகிய சாதகர் தாமே. 1140.

தாமேல் உறைவிடம் ஆறிதழ் ஆனது
பார்மேல் இதழ்பழி னெட்டிரு நூறுன
பூமேல் உறைகின்ற புண்ணியம் வந்தனள்
பார்மேல் உறைகின்ற பைந்தொடி யாளே. 1141.

பைந்தொடி யாளும் பரமன் இருந்திடத்
திண்கொடி யாகத் திகழ்திரு சோதியாம்
விண்கொடி யாகி விளங்கி வருதலால்
பெண்கொடி யாக நடந்தது உலகே. 1142.

நடந்தது அம்மலர் நாலுடன் அஞ்சாய்
இருந்தனர் கன்னிகள் எட்டுடன் ஒன்றாய்ப்
படர்ந்தது தன்வழி பங்கயத் துள்ளே
தொடர்ந்தது உள்வழி சோதி யடுத்தே. 1143.

அடுக்குத் தாமரை ஆதி இருப்பிடம்
எடுக்கும் தாமரை இல்லகத்து உள்ளது
மடுக்கும் தாமரை மத்தகச் தேசெல
முடுக்கும் தாமரை முச்சது ரத்தே. 1144.

முச்சது ரத்தே எழுந்த முளைச்சுடர்
எச்சது ரத்தும் இடம்பெற ஓடிடக்
கைச்சது ரத்துக் கடந்துள் ஒளிபெற
எச்சது ரத்தும் இருந்தனள் தானே. 1145.

இருந்தனள் தன்முகம் ஆறொடு நாலாய்ப்
பரந்தன வாயு திசை தோறும்
குவிந்தன முத்தின் முகவொளி நோக்கி
நடந்தது தேறல் அதோமுகம் அம்பே. 1146.

அம்பன்ன கண்ணி அரிவை மனோன்மணி
கொம்பன்ன நுண்ணிடை கோதை குலாவிய
செம்பொன்செய் யாக்கை செறிகமழ் நாடொறும்
நம்பனை நோக்கி நவிலுகின் றா\ளே. 1147.

நவிலும் பெருந்தெய்வம் நான்மறைச் சத்தி
துகிலுடை யாடை நிலம்பொதி பாதம்
அகிலமும் அண்ட முழுதும் செம்மாந்தும்
புகலும்முச் சோதி புனையநிற் பாளே. 1148.

புனையவல் லாள் புவனத்துஇறை எங்கள்
வனையவல் லாள் அண்டகோடிகள் உள்ளே
புனையவல் லாள்மண் லடத்தொளி தன்னைப்
புனையவல் லாளையும் போற்றியென் பேனே. 1149.

போற்றியென் பேன்புவ னாபதி அம்மையென்
ஆற்றலுள் நிற்கும் அருந்தவப் பெண்பிள்ளை
சீற்றங் கடிந்த திருநுதற் சேயிழை
கூற்றம் துரக்கின்ற கொள்பைந் தொடியே. 1150.

தொடியார் தடக்கைச் சுகோதய சுந்தரி
வடிவார் திரிபுரை யாமங்கை கங்கைச்
செடியார் வினைகெடச் சேர்வரை என்றென்
அடியார் வினைகெடுத்து ஆதியும் ஆமே. 1151.

மெல்லிசைப் பாவை வியோமத்தின் மென்கொடி
பல்லிசைப் பாவை பயன்தரு பைங்கொடி
புல்லிசைப் பாவை யைப் போகத் துரந்திட்டு
வல்லிசைப் பாவை மனம்புகுந் தானே. 1152.

தாவித தவப்பொருள் தான்அவன் எம்இறை
பாவித்து உலகம் படைக்கின்ற காலத்து
மேவிப் பராசக்தி மேலொடு கீழ்தொடர்ந்து
ஆவிக்கும் அப்பொருள் தானது தானே. 1153.

அதுஇது என்பர் அவனை அறியார்
கதிவர நின்றதோர் காரணம் காணார்
மதுவிரி பூங்குழல் மாமங்கை நங்கை
திதமது உன்னார்கள் தேர்ந்துஅறி யாரே. 1154.

8.
ஆதாரவாதேயம்

நாலிதழ் ஆறில் அவிர்ந்தது தொண்ணூறு
தானிதழ் ஆனவை நாற்பத்து நாலுள
பாலிதழ் ஆனவள் பங்கய மூலமாய்த்
தானிதழ் ஆகித் தரித்திருந் தாளே. 1155.

தரித்திருந் தாள்அவள் தண்ணொளி நோக்கி
விரித்திருந் தாள்அவள் வேதப் பொருளைக்
குறித்திருந் தாள்அவள் கூறிய ஐந்து
மறித்திருந் தாள்அவள் மாதுநல் லாளே. 1156.

மாதுநல் லாளும் மணாளன் இருந்திடப்
பாதிநல் லாளும் பகவனும் ஆனது
சோதிநல் லாளைத் துணைப் பெய்ய வல்லிரேல்
வேதனை தீர்தரும் வௌfளடை யாமே. 1157.

வௌfளடை யான்இரு மாமிகு மாமலர்க்
கள்ளடை யாரக் கமழ்குழ லார்மனம்
மள்ளடை யானும் வகைத்திற மாய்நின்ற
பெண்ணொரு பாகம் பிறவிப் பெண் ஆமே. 1158.

பெண்ணொரு பெண்ணை புணர்ந்திடும் பேதைமை
பெண்ணிடை ஆணும் பிறந்து கிடந்தது
பெண்ணுடை ஆண்என் பிறப்பறிந்து ஈர்க்கின்ற
பெண்ணுடை ஆணிடைப் பேச்சற்ற வாறே. 1159.

பேச்சற்ற நற்பொருள் காணும் பெருந்தகை
மாச்சற்ற சோதி மனோன்மணி மங்கையாங்
காச்சற்ற சோதி கடவு ளுடன்புணர்ந்து
தாச்சற்றெ னுள்புகுந் தாலிக்கும் தானே. 1160.

ஆலிக்குங் கன்னி அரிவை மனோன்மணி
பாலித்து உலகில் பரந்துபெண் ஆகும்
வேலைத் தலைவியை வேத முதல்வியை
ஆலித்து ஒருவன் உகந்துநின் றானே. 1161.

உலந்துநின் நான்நம்பி ஒண்ணுதற் கண்ணோடு
உகந்துநின் றான்நம் உழைபுக நோக்கி
உகந்துநின் றான்இவ் வுலகங்கள் எல்லாம்
உகந்துநின் றான்அவன் தன்தோள் தொகுத்தே. 1162.

குத்து முலைச்சி குழைந்த மருங்கினள்
துத்தி விரிந்த சுணங்கினள் தூமொழி
புத்தகச் சீறடிப் பாவை புணர்வினைத்
தொத்த கருத்துச் சொல்லகில் லேனே. 1163.

சொல்லஒண்ணாத அழற்பொதி மண்டலம்
சொல்லஒண் னாத திகைத்தங்கு இருப்பர்கள்
வெல்லஒண் ணாத வினைத்தனி நாயகி
மல்லஒண் ணாத மனோன்மணி தானே. 1164.

தானே இருநிலம் தாங்கிலிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறும் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே வடவரைத் தண்கடற் கண்ணே. 1165.

கண்ணுடை யாளைக் கலந்தங்கு இருந்தவர்
மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணப்
பண்ணுடை யார்கள் பதைப்பற்று இருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே. 1166.

கண்டுஎன் திசையும் கலந்து வருங்கன்னி
பண்டுஎன் திசையும் பராசக்தி யாய்நிற்கும்
விண்டுஎன் திசையும் விரைமலர் கைக்கொண்டு
தொண்டுஎன் திசையும் தொழநின்ற கன்னியே. 1167.

கன்னி ஔiயென நின்றஇச் சந்திரன்
மன்னி யிருக்கின்ற மாளிகை செந்நிறம்
சென்னி யிருப்பிடம் சேர்பதி னாறுடன்
பன்னி யிருப்பப் பராசக்தி யாமே. 1168.

பராசத்தி என்றென்று பல்வகை யாலும்
தராசத்தி யான தலைப்பிர மாணி
இராசத்தி யாமள ஆகமத் தாளாகும்
குராசத்தி கோலம் பலவுணர்ந் தேனே. 1169.

உணர்ந்த உலகு ஏழையும் யோகினி சத்தி
உணர்ந்துஉயி ராய்நிற்கும் உன்னதன் ஈசன்
புணர்ந்தொரு காலத்துப் போகமது ஆதி
இணைந்து பரமென்று இசைந்துஇது தானே. 1170.

இதுஅப் பெருந்தகை எம்பெரு மானும்
பொதுஅக் கல்வியும் போகமும் ஆகி
மது அக் குழலி மனோன்மணி மங்கை
அதுஅக் கல்வியுள் ஆYயுழி யோகமே. 1171.

யோகநற் சத்தி ஔiபீடம் தானாகும்
யோகநற் சத்தி ஔiமுகம் தெற்காகும்
யோகநற் சத்தி உதர நடுவாகும்
யோகநற் சத்திதான் உத்தரந் தேரே. 1172.

தேர்ந்தெழு மேலாம் சிவன்அங்கி யோடுற
வார்ந்தெழு மாயையும் அந்தம தாய்நிற்கும்
ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிட
கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே. 1173.

தானான ஆறுஎட்ட தாம்பரைக் குண்மிசை
தானான ஆறும்ஈ ரேழும் சமகலை
தானான விந்து சகமே பரமெனும்
தானாம் பரவா தனையெனத் தக்கதே. 1174.

தக்க பராவித்தை தானிரு பானேழில்
தக்கெழும் ஓர்உத் திரம்சொல்லச் சொல்லவே
மிக்கிடும் எண்சக்தி வெண்ணிற முக்கண்ணி
தொக்க கதையோடு தொன்முத் திரையாளே. 1175.

முத்திரை மூன்றின் முடிந்தமெய்ஞ் ஞானத்தன்
தத்துவ மாய்அல்ல வாய சகலத்தள்
வைத்த பராபர னாய பராபரை
சத்தியும் ஆனந்த சத்தியும் கொங்கே. 1176.

கொங்குஈன்ற கொம்பின் குரும்பைக் குலாங்கன்னி
பொங்கிய குங்குமத் தொளி பொருந்தினள்
அங்குச பாசம் எனும்அகி லம் கனி
தங்கும் அவள்மனை தான்அறி வாயே. 1177.

வாயு மனமும் கடந்த மனோன்மணி
பேயும் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்
தாயும் மகளும்நல் தாரமும் ஆமே. 1178.

தாரமும் ஆகுவள் தத்துவ மாய்நிற்பள்
காரண காரிய மாகும் கலப்பினள்
பூரண விந்து பொதிந்த புராதனி
பாரள வாந்திசை பத்துடை யாளே. 1179.

பத்துமுடை யாள்நம் பராசத்தி
வைத்தனள் ஆறங்க நாலுடன் தான்வேதம்
ஒத்தனள் ஆதாரம் ஒன்றுடன் ஓங்கியே
நித்தமாய் நின்றாள்எம் நேரிழை கூறே. 1180.

கூறிய கன்னி குலாய புருவத்தள்
சீறிய ளாய்உல கேழும் திகழ்ந்தவள்
ஆரிய நங்கை அமுத பயோதரி
பேருயி ராளி பிறிவறுத் தாளே. 1181.

பிறிவின்றி நின்ற பெருந்தகைப் பேதை
குறியொன்றி நின்றிடும் கோமளக் கொம்பு
பொறியொன்றி நின்று புணர்ச்சிசெய் தாங்கே
அறிவொன்றி நின்றனள் ஆருயி ருள்ளே. 1182.

உள்ளத்தின் உள்ளே உடனிருந்து ஐவர்தம்
கள்ளத்தை நீக்கிக் கலந்துட னேபுல்கிக்
கொள்ளத் தவநெறி கூடிய இன்பத்து
வள்ளல் தலைவி மருட்டிப் புரிந்தே. 1183.

புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்
பொருந்தி யிருந்த புதல்விபூ வண்ணத்து
இருந்த இலக்கில் இனிதிருந் தாளே. 1184.

இருந்தனள் ஏந்திழை என்னுளம் மேவித்
திருந்து புணர்ச்சியில் தேர்ந்துணர்ந்து உன்னி
நிரந்தர மாகிய நிரதி சயமொடு
பொருந்த விலக்கில் புணர்ச்சி அதுவே. 1185.

அதுஇது என்னும் அவாவினை நீக்கித்
துதியது செய்து சுழியுற நோக்கில்
விதியது தன்னையும் வென்றிட லாகும்
மதிமல ராள்சொன்ன மண்டலம் மூன்றே. 1186.

மூன்றுள மண்டலம் மோகினி சேர்விடம்
ஏன்றுள ஈராறு எழுகலை உச்சியில்
தோன்றும் இலக்குற ஆகுதல் மாமாயை
ஏன்றனள் ஏழிரண்டு இந்துவோடு ஈறே. 1187.

இந்துவின் நின்றொழு நாதம் இரவிபோல்
வந்துபின் நாக்கின் மதித்தெழு கண்டத்தில்
உந்திய சோதி இதயத்து எழும்ஒலி
இந்துவின் மேலுற்ற ஈறது தானே. 1188.

ஈறது தான்முதல் எண்ணிரண்டு ஆயிரம்
மாறுதல் இன்றி மனோவச மாய் எழில்
தூறது செய்யும் சுகந்தச் சுழியது
பேறது செய்து பிறந்திருந் தாளே. 1189.

இருந்தனள் ஏந்திழை ஈறதி லாகத்
திருந்திய ஆனந்தம் செந்நெறி நண்ணிப்
பொருந்து புவனங்கள் போற்றிசெய்து ஏத்தி
வருந்த இருந்தனள் மங்கைநல் லாளே. 1190.

மங்கையும் மாரனும் தம்மொடு கூடிநின்று
அங்குலி கூட்டி அகம்புறம் பார்த்தனர்
கொங்கைநல் லாளும் குமாரர்கள் ஐவரும்
தங்களின் மேவிச் சடங்குசெய் தாரே. 1191.

சடங்கது செய்து தவம்புரி வார்கள்
கடந்தனின் உள்ளே கருதுவர் ஆகில்
தொடர்ந்தெழு சோதி துளைவழி ஏறி
அடங்கிடும் அன்பினது ஆயிழை பாலே. 1192.

பாவித் திருக்கும் பனிமலர் ஆறினும்
ஆலித் திருக்கும் அவற்றின் அகம்படி
சீலத்தை நீக்கத் திகழ்ந்தெழு மந்திரம்
மூலத்து மேலது முத்தது வாமே. 1193.

முத்து வதனத்தி முகந்தொறும் முக்கண்ணி
சத்தி சதிரி சகளி சடாதரி
பத்துக் கரத்தி பராபரன் பைந்தொடி
வித்தகி என்னுளம் மேவிநின் றாளே. 1194.

மேவிய மண்டலம் மூன்றுடன் கீழ்எரி
தாவிய நற்பதத் தள்மதி யங்கதிர்
மூவரும் கூடி முதல்வியாய் முன்நிற்பார்
ஓவினும் மேலிடும் உள்ளளி யாமே. 1195.

உள்ளளி மூவிரண்டு ஓங்கிய அங்கங்கள்
வௌfளளி அங்கியின் மேவி அவரொடும்
கள்ளவிழ் கோதை கலந்துடனே நிற்கும்
கொள்ள விசுத்திக் கொடியமு தாமே. 1196.

கொடியதுஇ ரேகை குருவுள் இருப்பப்
படியது வாருணைப் பைங்கழல் ஈசன்
வடிவது ஆனந்தம் வந்து முறையே
இடுமுதல் ஆறங்கம் ஏந்திழை யாளே. 1197.

ஏந்திழை யாளும் இறைவர்கள் மூவரும்
காந்தாரம் ஆறும் கலைமுதல் ஈரெட்டும்
ஆந்த குளத்தியும் மந்திரர் ஆயவும்
சார்ந்தனர் ஏத்த இருந்தனள் சத்தியே. 1198.

சத்தியென் பாளரு சாதகப் பெண்பிள்ளை
முத்திக்கு நாயகி என்பது அறிகிலர்
பத்தியைப் பாழில் உகுத்தஅப் பாவிகள்
கத்திய நாய்போல் கதறுகின் றாரே. 1199.

ஆரே திருவின் திருவடி காண்பார்கள்
நேரே நின்றுஓதி நினையவும் வல்லார்க்குக்
காரேர் குழலி கமல மலரன்ன
சீரேயும் சேவடி சிந்தைவைத் தாளே. 1200.

சிந்தையில் வைத்துச் சிராதியி லேவைத்து
முந்தையில் வைத்துத்தம் மூலத்திலே வைத்து
நிந்தையில் வையா நினைவதிலே வைத்துச்
சந்தையில் வைத்துச் சமாதி செய் வீரே. 1201.

சமாதிசெய்வார்கட்குத் தான் முத லாகிச்
சிவாதியி லாரும் சிலைநுத லாளை
நவாதியி லாக நயந்தது ஓதில்
உவாதி அவளுக்கு உறைவில தாமே. 1202.

உறைபதி தோறும் முறைமுறை மேவி
நறைகமழ் கோதையை நாடொறும் நண்ணி
மறையுட னேநிற்கும் மற்றுள்ள நான்கும்
இறைதினைப் போதினில் எய்திடலாமே. 1203.

எய்திட லாகும் இருவினை யின்பயன்
கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னி
மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு
கைதவம் இன்றி கருத்துறும் வாறே. 1204.

கருத்துறுங் காலம் கருது மனமும்
திருத்திஇ இருந்தவை சேரு நிலத்து
ஒருத்தியை உன்னி உணர்ந்திடு மண்மேல்
இருத்திடும் எண்குணம் எய்தலும் ஆமே. 1205.

ஆமையொன்று ஏறி அகம்படி யான்என
ஓம்என்று ஓதிஎம் உள்ளளி யாய்நிற்கும்
தாம நறுங்குழல் தையலக் கண்டபின்
சோம நறுமலர் சூழநின் றாளே. 1206.

சூடிடும் அங்குச பாசத் துளைவழி
கூடும் இருவளைக் கோலக்கைக் குண்டிகை
நாடும் இருபத நன்னெடு ருத்திரம்
ஆடிடும் சீர்புனை ஆடக மாமே. 1207.

ஆயமன் மால்அரன் ஈசன் சதாசிவன்
தாமடி சூழநின்று எய்தினார் தம்பதம்
காமனும் சாமன் இரவி கனலுடன்
சோமனும் வந்தடி சூடநின் றாளே. 1208.

சூடும் இளம்பிறை சூலி கபாலினி
நீடும் இளங்கொடி நின்மலி நேரிழை
நாடி நடுவிடை ஞானம் உருவநின்று
ஆடும் அதன்வழி அண்ட முதல்வியே. 1209.

அண்டமுதலாய் அவனிபரி யந்தம்
கண்டதுஒன்று இல்லைக் கனங்குழை அல்லது
கண்டதும் கண்டியும் ஆகி ய காரணம்
குண்டிகை கோளிகை கண்டத ளாலே. 1210.


ஆலம்உண் டான்அமுது ஆங்கவர் தம்பதம்
சாலவந்து எய்தும் தவத்துஇன்பம் தான்வரும்
கோலிவந்து எய்தும் குவிந்த பதவையோடு
ஏலவந்து ஈண்டி இருந்தனள் மேலே. 1211.

மேலாம் அருந்தவம் மேன்மேலும் வந்தெய்தக்
காலால் வருந்திக் கழிவர் கணத்திடை
நாலா நளினநின்று ஏத்திநட் டுச்சிதன்
மேலாம் எழுத்தினள் ஆமத்தி னாளே. 1212.

ஆமத்து இனிதிருந்து அன்ன மயத்தினள்
ஓமத்தி லேயும் ஒருத்தி பொருந்தினள்
நாம் நமசிவ என்றுஇருப்பார்க்கு
நேமத் துணைவி நிலாவிநின் றாளே. 1213.

நிலாமய மாகிய நீள்படி கத்தின்
சிலாமய மாகும் செழுந்த ரளத்தின்
சுலாமய மாகும் சுரிகுழற் கோதை
கலாமய மாகக் கலந்துநின் றாளே. 1214.

கலந்துநின் றாள்கன்னி காதல னோடும்
கலந்துநின் றாள்உயிர் கற்பனை எல்லாம்
கலந்துநின் றாள்கலை ஞானங்கள் எல்லாம்
கலந்துநின் றாள்கன்னி காலமு மாயே. 1215.

காலவி எங்கும் கருத்தும் அருத்தியும்
கூலவி ஒன்றாகும் கூட இழைத்தனள்
மாலின் மாகுலி மந்திர சண்டிகை
பாலினி பாலவன் பாகம் தாமே. 1216.

பாகம் பராசத்தி பைம்பொன் சடைமுடி
ஏகம் இருதயம் ஈரைந்து திண்புயம்
மோக முகம்ஐந்து முக்கண் முகந்தொறும்
நுaகம் உரித்து நடஞ்செய்யும் நாதர்க்கே. 1217.

நாதனும் நால்ஒன் பதின்மரும் கூடிநின்று
ஓதிடும் கூட்டங்கள் ஓர் ஐந்து உளஅவை
வேதனும் ஈரொன்ப தின்மரும் மேவிநின்று
ஆதியும் அந்தமும் ஆகிநின் றாளே. 1218.

ஆகின்ற நாள்கலை ஐம்பத்து ஒருவர்கள்
ஆகிநின் றார்களில் ஆருயி ராம்அவள்
ஆகிநின் றாளுடன் ஆகிய சக்கரத்து
ஆகிநின் றான்அவன் ஆயிழை பாடே. 1219.

ஆயிழை யாளடும் ஆதிப் பரமிடம்
ஆயதொர் அண்டவை யாறும் இரண்டுள
ஆய மனந்தொறு அறுமுகம் அவைதனில்
ஏயவார் குழலி இனிதுநின் றாளே. 1220.

நின்றனள் நேரிழை யோடுடன் நேர்பட
இன்றென் அகம்படி ஏழு உயிர்ப்பெய்தும்
துன்றிய ஓர்ஒன் பதின்மரும் சூழலுள்
ஒன்றுயர் ஓதி உணர்ந்துநின் றாளே. 1221.

உணர்ந்தெழு மந்திரம் ஓம்எனும் உள்ளே
மணந்தெழும் ஆங்கதி யாகிய தாகும்
குணந்தெழு சூதனும் சூதியும் கூடிக்
கணந்தெழும் காணும்அக் காமுகை யாமே. 1222.

ஆமது அங்கியும் ஆதியும் ஈசனும்
மாமது மண்டல மாருதம் ஆதியும்
ஏமது சீவன் சிகையங்கு இருண்fடிடக்
கோமலர்க் கோதையும் கோதண்ட மாகுமே. 1223.

ஆகிய கோதண்டத் தாகு மனோன்மணி
ஆகிய ஐம்பத்துடனே அடங்கிடும்
ஆகும் பராபரை யோடுஅப் பரையவள்
ஆகும் அவள்ஐங் கருமத்தள் தானே. 1224.

தானிகழ மோகினி சார்வண யோகினி
போன மயமுடை யார்அடி போற்றுவர்
ஆனவர் ஆவியின் ஆகிய அச்சிவம்
தானாம் பரசிவம் மேலது தானே. 1225.

தானந்த மேலே தருஞ்சிகை தன்னுடன்
ஆனந்த மோகினி யாம்பொன் திருவொடு
மோனையில் வைத்து மொழிதரு கூறது
ஆனவை யோமெனும் அவ்வுயிர் மார்க்கமே. 1226.

மார்க்கங்கள் ஈன்ற மனோன்மணி மங்கலி
யார்க்கும் அறிய அரியாள் அவளாகும்
வாக்கும் மனமும் மருவி ஒன்றாய் விட்ட
நோக்கும் பெருமைக்கு நுண்ணறிவு ஆமே. 1227.

நுண்ணறி வாகும் நுழைபுலன் மாந்தர்க்குப்
பின்னறி வாகும் பிரான்அறிவு அத்தடம்
செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத்
தன்னெறி யாவது சன்மார்க்கம் ஆமே. 1228.

சன்மார்க்க மாகச் சமைதரு மார்க்கமும்
துன்மார்க்க மானவை எல்லாம் துரந்திடும்
நன்மார்க்க தேவரும் நன்னெறி யாவதும்
சன்மார்க்க தேவியும் சத்தியென் பாளே. 1229.

சத்தியம் நானும் சயம்புவம் அல்லது
முத்தியை யாரும் முதல்அறி வாரில்லை
அத்திமேல் வித்திடில் அத்தி பழுத்தக்கால்
மத்தியில் ஏற வழியது வாமே. 1230.

அதுஇது என்றுஅவ மேகழி யாதே
மதுவிரி பூங்குழல் மங்கைநல் லாளைப்
பதிமது மேவிப் பணியவல் லார்க்கு
விதிவழி தன்னையும் வென்றிட லாமே. 1231.

வென்றிட லாகும் விதிவழி தன்னையும்
வென்றிட லாகும் வினைப்பெரும் பாசத்தை
வென்றிட லாகும் விழைபுலன் தன்னையும்
வென்றிடு மங்கைதன் மெய்யுணர் வோர்க்கே. 1232.

ஓர்ஐம் பதின்மருள் ஒன்றியே நின்றது
பாரம் பரியத்து வந்த பரமிது
மாரன் குழலாளும் அப்பதி தானும்முன்
சாரும் பதமிது சத்திய மாமே. 1233.

சத்தியி னோடு சயம்புவம் நேர்படில்
வித்தது இன்றியே எல்லாம் விளைந்தன
அத்தகை யாகிய ஐம்பத்து ஒருவரும்
சித்தது மேவித் திருந்திடு வாரே. 1234.

திருந்துசிவனும் சிலைநுத லாளும்
பொருந்திய வானவர் போற்றிசெய்து ஏத்த
அருந்திட அவ்விடம் ஆரமுது ஆக
இருந்தனள் தான்அங்கு இளம்பிறை என்றே. 1235.

என்றும் எழுகின்ற ஏரினை எய்தினார்
அன்றது ஆகுவர் தார்குழ லாளடு
மன்றரு கங்கை மதியொடு மாதவர்
துன்றிய தாரகை சோதிநின் றாளே. 1236.

நின்றனள் நேரிழை யாளடு நேர்பட
ஒன்றிய உள்ளளி யாலே உணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடு ஞானங்கள் தோன்றிடும் தானே. 1237.

தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி
ஈன்றிடும் ஆங்கவள் எய்திய பல்கலை
மான்தரு கண்ண்iயும் மாரனும் வந்தெதிர்
கான்றது வாகுவர் தாம்அவள் ஆயுமே. 1238.

ஆயும் அறிவும் கடந்தணு ஆரணி
மாயம தாகி மதோமதி ஆயிடும்
சேய அரிவை சிவானந்த சுந்தரி
நேயம தாநெறி யாகிநின் றாளே. 1239.

நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடும்
குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும்
அறிவொடும் ஆங்கே அடங்கிட லாமே. 1240.

ஆம்அயன்மால் அரன் ஈசன்மா லாங்கதி
ஓமய மாகிய ஒன்பதும் ஒன்றிடத்
தேமயன் ஆளும் தெனாதென என்றிடும்
மாமய மானது வந்தெய்த லாமே. 1241.

வந்தடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதலாக எண்டிசை யோர்களும்
கொந்தணி யுங்குழ லாள்ஒரு கோனையும்
வந்தனை செய்யும் வழிநவில் வீரே. 1242.

நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபம்
கவற்றிய கந்தம் கவர்ந்துஎரி தீபம்
பயிற்றும் உலகினில் பார்ப்பதி பூசை
அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்fசனை தானே. 1243.

தாங்கி உலகில் தரித்த பராபரன்
ஓங்கிய காலத்து ஒருவன் உலப்பிலி
பூங்கிளி தங்கும் புரிகுழ லாள்அன்று
பாங்குடன் ஏற்பப் பராசத்தி போற்றே. 1244.

பொற்கொடி மாதர் புனைகழல் ஏத்துவர்
அற்கொடி மாதுமை ஆர்வத் தலைமகள்
நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடை
விற்கொடி மாதை விரும்பி விளங்கே. 1245.

விளங்கொளி யாய விரிசுடர் மாலை
துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கத்
களங்கொள் மணியுடன் காம வினோதம்
உளங்கொள் இலம்பியம் ஒன்று தொடரே. 1246.

தொடங்கி உலகினில் சோதி மணாளன்
அடங்கி இருப்பதென் அன்பின் பெருமை
விடங்கொள் பெருஞ்சடை மேல்வரு கங்கை
ஒடுங்கி உமையொடும் ஓருரு வாமே. 1247.

உருவம் பலஉயி ராய்வல்ல நந்தி
தெருவம் புகுந்தமை தேர்வுற நாடில்
புரிவளைக் கைச்சிஎம் பொன்னணி மாதை
மருவி இறைவன் மகிழ்வன மாயமே. 1248.

மாயம் புணர்க்கும் வளர்சடை யானடித்
தாயம் புணர்க்கும் சலநதி அமலனைக்
காயம் புணர்க்கும் கலவியுள் மாசத்தி
ஆயம் புணர்க்கும்அவ் வியோனியும் ஆமே. 1249.

உணர்ந்துஒழிந் தேன்அவன் னாம் எங்கள் ஈசனை
புணர்ந்துஒழிந் தேன்புவ னாபதி யாரை
அணைந்துஒழிந் தேன்எங்கள் ஆதிதன் பாதம்
பிணைந்துஒழிந்த தேன்தன் அருள்பெற்ற வாறே. 1250.

பெற்றாள் பெருமை பெரிய மனோன்மணி
நற்றாள் இறைவனே நற்பயனே என்பர்
கற்றான் அறியும் கருத்தறி வார்கட்குப்
பொற்றாள் உலகம் புகல்தனி யாமே. 1251.

தனிநா யகன்த னோடுஎன்நெஞ்சம் நாடி
இனியார் இருப்பிடம் ஏழுலகு என்பர்
பனியான் மலர்ந்தபைம் போதுகை ஏந்திக்
கனியாய் நினைவதென் காரணம் அம்மையே. 1252.

அம்மனை அம்மை அரிவை மனோன்மணி
செம்மனை செய்து திருமங்கை யாய்நிற்றும்
இம்மனை செய்த இன்னில மங்கையும்
அம்மனை யாகி அமர்ந்து நின்றானே. 1253.

அம்மையும் அத்தவனும் அன்புற்றது அல்லது
அம்மையும் அத்தனும் ஆர்அறி வார்என்னை
அம்மையொடு அத்தனும் யானும் உடனிருந்து
அம்மையொடு அத்தனை யான்புரிந் தேனே. 1254.

9.
ஏரொளிச் சக்கரம்

ஏரொளி உள்ளெழு தாமரை நாலிதழ்
ஏரொளி விந்துவி னால்எழு நாதமாம்
ஏரொளி அக்கலை எங்கும் நிறைந்தபின்
ஏரொளிச் சக்கரம் அந்நடு வன்னியே. 1255.

வன்னி எழுத்தவை மாபலம் உள்ளன
வன்னி எழுத்தவை வானுற ஓங்கின
வன்னி எழுத்தவை மாபெரும் சக்கரம்
வன்னி எழுத்திடு வாறுஅது சொல்லுமே. 1256.

சொல்லிய விந்துவும் ஈராறு நாதமாம்
சொல்லிடும் அப்பதி அவ்எழுத் தாவன
சொல்லிடும் நூறொடு நாற்பத்து நாலுரு
சொல்லிரு சக்கர மாய்வரு மேலதே. 1257.

மேல்வரும் விந்துவும் அவ்எழுத் தாய்விடும்
மேல்வரும் நாதமும் ஓங்கும் எழுத்துடன்
மேல்வரும் அப்பதி அவ்எழுத் தேவரின்
மேல்வரும் சக்கர மாய்வரும் ஞாலமே. 1258.

ஞாலம தாக விரிந்தது சக்கரம்
ஞாலம தாயிடும் விந்துவும் நாதமும்
ஞாலம தாயிடும் அப்பதி யோசனை
ஞாலம தாக விரிந்தது எழுத்தே. 1259.

விரிந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விரிந்த எழுத்தது சக்கர மாக
விரிந்த எழுத்தது மேல்வரும் பூமி
விரிந்த எழுத்தினில் அப்புறம் அப்பே. 1260.

அப்பஅது வாக விரிந்தது சக்கரம்
அப்பினில் அப்புறம் அவ்அனல் ஆயிடும்
அப்பினில் அப்புறம் மாருத மாய்எழ
அப்பினில அப்புறம் ஆகாச மாமே. 1261.

ஆகாச அக்கரம் ஆவது சொல்லிடில்
ஆகாச அக்கரத்து உள்ளே எழுத்தவை
ஆகாச அவ்எழுத்து ஆகிச் சிவானந்தம்
ஆகாச அக்கரம் ஆவது அறிமினே. 1262.

அறிந்திடும் சக்கரம் ஐ அஞ்சு விந்து
அறிந்திடும் சக்கரம் நாத முதலா
அறிந்திடும் அவ்எழுத்து அப்பதி யோர்க்கும்
அறிந்திடும் அப்பக லோன்நிலை யாமே. 1263.

அம்முதல் ஆறும்அவ் ஆதி எழுத்தாகும்
அம்முதல் ஆறும்அவ் அம்மை எழுத்தாகும்
இம்முதல் நாலும் இருந்திடு வன்னியே
இம்முதல் ஆகும் எழுத்தலை எல்லாம். 1264.

எழுத்தவை நூறொடு நாற்பத்து நாலும்
எழுத்தவை ஆறது அந்நடு வன்னி
எழுத்தவை அந்நடு அச்சுட ராகி
எழுத்தவை தான்முதல் அந்தமும் ஆமே. 1265.

அந்தமும் ஈறு முதலா னவையற
அந்தமும் அப்பதி னெட்டுடன் ஆதலால்
அந்தமும் அப்பதின் Yமூன்றில் அமர்ந்தபின்
அந்தமும் இந்துகை ஆருடம் ஆனதே. 1266.

ஆவினம் ஆனவை முந்நூற்று அறுபதும்
ஆவினம் அப்பதின் ஐந்தின மாயுறும்
ஆவினம் அப்பதி னெட்டுடன் ஆயுறும்
ஆவினம் அக்கதி ரோன்வர வந்தே. 1267.

வந்திடும் ஆகாசம் ஆறது நாழிகை
வந்திடும் அக்கரம் முப்பதி ராசியும்
வந்திடு நாளது முந்நூற் றறுபதும்
வந்திடு ஆண்டு வகுத்துறை அவ்வியே. 1268.

அவ்வின மூன்றும்அவ் ஆடது வாய்வரும்
எவ்வின மூன்றும் கிளர்தரு ஏறதாம்
சவ்வின மூன்றும் தழைத்திடும் தண்டதாம்
இவ்வின மூன்றும் இராகிகள் எல்லாம். 1269.

இராசியுள் சக்கரம் எங்கும் நிறைந்தபின்
இராசியுள் சக்கரம் என்றறி விந்துவாம்
இராசியுள் சக்கரம் நாதமும் ஒத்தபின்
இராசியுள் சக்கரம் நின்றிடு மாறே. 1270.

நின்றிடு விந்துவென் றுள்ள எழுத்தெல்லாம்
நின்றிடு நாதமும் ஓங்கும் எழுத்துடன்
நின்றிடும் அப்பதி அவ்வெழுத் தேவரில்
நின்றிடும் அப்புறம் தாரகை யானதே. 1271.

தாரகை யாகச் சமைந்தது சக்கரம்
தாரகை மேலோர் தழைத்தது பேரொளி
தாரகை சந்திரன் நற்பக லோன்வரத்
தாரகை தாரகை தாரகை கண்டதே. 1272.

கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம்
கண்டிடு நாதமும் தன்மேல் எழுந்திடக்
கண்டிடு வன்னிக் கொழுந்தன ஒத்தபின்
கண்டிரும் அப்புறம் காரொளி யானதே. 1273.

காரொளி ஆண்டம் பொதிந்துஉலகு எங்கும்
பாரொளி நீரொளி சாரொளி காலொளி
வானொளி ஒக்க வளர்ந்து கிடந்துபின்
நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே. 1274.

நின்றது அண்டமும் நீளும் புலியெலாம்
நின்றவிவ் வண்ட நிலைபெறக் கண்டிட
நின்றவிவ் வண்டமு மூல மலம்ஒக்கும்
நின்றஇவ் வண்டம் பலமது விந்துவே. 1275.

விந்துவும் நாதமும் ஒக்க விழுந்திfடில்
விந்துவும் நாதமும் ஒக்க விரையதாம்
விந்திற் குறைந்திடு நாதம் எழுந்திடில்
விந்துவை எண்மடி கொண்டது வீசமே. 1276.

வீசம் இரண்டுள நாதத்து எழுவன
வீசமும் ஒன்று விரைந்திடு மேலுற
வீசமும் நாதமும் எழுந்துடன் ஒத்தபின்
வீசமும் விந்து விரிந்தது காணுமே. 1277.

விரிந்தது விந்துவும் கெட்டது வீசம்
விரிந்தது விந்துவும் நாதத்தும் அளவினில்
விரிந்தது உட்கட்ட எட்டெட்டும் ஆகில்
விரிந்தது விந்து விரையது வாமே. 1278.

விரையது விந்து விளைந்தன எல்லாம்
விரையது விந்து விளைந்த உயிரும்
விரையது விந்து விளைந்தவிஞ் ஞாலம்
விரையது விந்து விளைந்தவன் தானே. 1279.

விளைந்த எழுத்தது விந்துவும் நாதமும்
விளைந்த எழுத்தது சக்கர மாக
விளைந்த எழுத்தவை மெய்யினுள் நிற்கும்
விளைந்த எழுத்தவை மந்திர மாமே. 1280.

மந்திரம் சக்கரம் ஆனவை சொல்லிடில்
தந்திரத்து உள்ளெழுத்து ஒன்றுஎரி வட்டமாம்
தந்திரத் துள்ளும்இ ரேகையில ஒன்றில்லை
பந்தமது ஆகும் பிரணவம் உன்னிடே. 1281.

உன்னிட்ட வட்டத்தில் ஒத்தெழு மந்திரம்
பின்னிட்ட ரேகை பிழைப்பது தானில்லை
தன்னிட்டுஎழுந்த தகைப்பறப் பின்னிற்கப்
பன்னிட்ட மந்திரம் பார்க்கலும் ஆமே. 1282.

பார்க்கலும் ஆகும் பகையறு சக்கரம்
காக்கலும் ஆகும் கருத்தில் கடமெங்கும்
நோக்கலும் ஆகும் நுணுக்கற்ற நுண்பொருள்
ஆக்குலும் ஆகும் அறிந்துகொள் வார்க்கே. 1283.

அறிந்திடும் சக்கரம் ஆதி எழுத்து
விரிந்திடும் சக்கரம் மேலெழுத்து அம்மை
பரிந்திடும் சக்கரம் பாரங்கி நாலும்
குவிந்திடும் சக்கரம் கூறலும் ஆமே. 1284.

கூறிய சக்கரத்து உள்ளெழு மந்திரம்
ஆறியல் பாக அமைந்து விரிந்திடும்
தேறிய அஞ்சுடன் சேர்ந்தெழு மாரண
மாறியல் பாக மதித்துக்கொள் வார்க்கே. 1285.

மதித்திடும் அம்மையும் மாமாதும் ஆகும்
மதித்திடும் அம்மையும் அங்கனல் ஒக்கும்
மதித்தங்கு எழுந்தவை காரணம் ஆகில்
கொதித்தங்கு எழுந்தலை கூடகி லாவே. 1286.

கூடிய தம்பனம் மாரணம் வசியம்
ஆடியல் பாக அமைந்து செறிந்திடும்
பாடியுள் ளாகப் பகைவரும் வந்துறார்
தேடியுள் ளாகத் தௌiந்துகொள் வார்க்கே. 1287.

தௌiந்திடும் சக்கர மூலத்தின் உள்ளே
அளித்த அகாரத்தை அந்நாடு வாக்கிக்
குளிர்ந்த அரவினைக் கூடியுள் வைத்து
வளிந்தவை அங்கெழு நாடிய காலே. 1288.

கால்அரை முக்கால் முழுதெனும் மந்திரம்
ஆலித்து எழுந்துஅமைந்து ஊறி எழுந்தாய்ப்
பாலித்து எழுந்து பகையற நின்றபின்
மாலுற்ற மந்திரம் மாறிக்கொள் வார்க்கே. 1289.

கொண்டஇம் மந்திரம் கூத்தன் எழுத்ததாய்ப்
பண்டையுள் நாவில் பகையற விண்டபின்
மன்று நிறைந்த மணிவிளக் காயிடும்
இன்றும் இதயத்து எழுந்து நமஎனே. 1290.

10.
வயிரவச் சக்கரம்

அறிந்த பிரதமையோடு ஆறும் அறிஞ்சு
அறிந்தஅச் சத்தமி மேல்இவை குற்றம்
அறிந்துஅவை ஒன்றுவிட்டு ஒன்றுபத் தாக
அறிந்து வலமது வாக நடவே. 1291.

நடந்து வயிரவன் சூல கபாலி
நடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது
படர்ந்த உடல்கொடு பந்தாட லாமே. 1292.

ஆமேவப் பூண்டருள் ஆதி வயிரவன்
ஆமே கபாலமும் சூலமும் கைக்கொண்டுஅங்கு
ஆமே தமருக பாசமும் கையது
வாமே சிரத்தொடு வாளது கையே. 1293.

கையவை யாறும் கருத்துற நோக்கிடும்
மெய்யது செம்மை விளங்கு வயிரவன்
துய்யரு ளத்தில் துளங்கு மெய் யுற்றதாய்ப்
பொய்வகை விட்டுநீ பூசனை செய்யே. 1294.

பூசனை செய்யப் பொருந்துஓர் ஆயிரம்
பூசனை செய்ய மதுவுடன் ஆகுமாம்
பூசனை சாந்து சவாது புழுகுநெய்
பூசனை செய்துநீர் பூசலை வேண்டுமே. 1295.

வேண்டிய வாறு கலகமும் ஆயிடும்
வேண்டிய ஆறினுள் மெய்யது பெற்றபின்
வேண்டிய வாறு வரும்வழி நீநட
வேண்டிய வாறது வாகும் கருத்தே. 1296.

11.
சாம்பவி மண்டலச் சக்கரம்

சாம்பவி மண்டலச் சக்கரம் சொல்லிடில்
ஆம்பதம் எட்டாக விட்கடிடின் மேல்தரங்க
காண்பதம் தத்துவ நாலுள் நயனமும்
நாம்பதம் கண்டபின் நாடறிந் தோமே. 1297.

நாடறி மண்டலம் நல்லவிக் குண்டத்துக்
கோடறி வீதியும் தொடர்ந்துள் இரண்டழி
பாடறி பத்துடன் ஆறு நடுவீதி
ஏடற நால்ஐந்து இடவகை யாமே. 1298.

நால்ஐந்து இடவகை உள்ளதோர் மண்டலம்
நாலுநல் வீதியுள் நல்ல இலிங்கமாய்
நாலுநற் கோணமும் நந்நால் இலிங்கமாய்
நாலுநற் பூநடு நண்ணல்அவ் வாறே. 1299.

ஆறிரு பத்துநால் அஞ்செழுத்து அஞ்சையும்
வேறுரு வாக விளைந்து கிடந்தது
தேறி நிருமல சிவாய நமவென்று
கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே. 1300.

குறைவதும் இல்லை குரைகழற் கூடும்
அறைவதும் ஆரணம் அவ்எழுத்து ஆகித்
திறமது வாகத் தௌயவல் லார்க்கு
இறவில்லை என்றென்று இயம்பினர் காணே. 1301.

காணும் பொருளும் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக்
காணும் கனகமும் காரிகை யாமே. 1302.

ஆமே எழுத்தஞ்சும் ஆம்வழி யேயாகப்
போமே அதுதானும் போம்வழியே போனால்
நாமே நினைத்தனை செய்யலு மாகும்
பார்மேல் ஒருவர் பகையில்லை தானே. 1303.

பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாணாளும் நன்மைகள் ஆகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானும் சலமது வாமே. 1304.

ஆரும் உரைசெய்ய லாம்அஞ் செழுத்தாலே
யாரும் அறியாத ஆனந்த ரூபமாம்
பாரும் விசும்பும் பகலும் மதியதி
ஊனும் உயிரும் உணர்வது வாமே. 1305.

உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே
அணைந்தெழும் ஆங்கதன் ஆதியது ஆகும்
குணர்ந்தெழு சூதனும் சூதியும் கூடிக்
கணந்தெழும் காணும் அக் காமுகை யாலே. 1306.

12.
புவனபதி சக்கரம்

ககராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
அகராதி ஓராறு அரத்தமே போலும்
சகராதி ஓர்நான்கும் தான்சுத்த வெண்மை
ககராதி மூவித்தை காமிய முத்தியே. 1307.

ஓரில் இதுவே உரையும் இத் தெய்வத்தைத்
தேரில் பிறிதில்லை யானொன்று செப்பக்கேள்
வாரித் திரிகோண மனம்இன்ப முத்தியும்
தேரில் அறியும் சிவகாயம் தானே. 1308.

ஏக பராசக்தி ஈசற்குஆம் அங்கமே
யாகம் பராவித்தை யாமுத்தி சித்தையே
ஏகம் பராசக்தி யாகச் சிவகுரு
யோகம் பராசத்தி உண்மைஎட் டாமே. 1309.

எட்டா கியசத்தி எட்டாகும் யோகத்துக்
கட்டாகு நாதாந்தத்து எட்டும் கலப்பித்தது
ஒட்டாத விந்துவும் தானற்று ஒழிந்தது
கிட்டாது ஒழிந்தது கீழான மூடர்க்கே. 1310.

ஏதும் பலமாம் இயந்திரா சன்அடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச்செம்பிற் சட்கோணம் தானிட்டே. 1311.

சட்கோணம் தன்னில் ஸ்ரீம்ஹிரீம் தானிட்டு
அக்கோணம் ஆறின் தலையில்ரீங் கராமிட்டு
எக்கோண மும்சூழ எழில்வட்டம் இட்டுப்பின்
மிக்கீர்எட்டு அக்கரம் அம்முதல் மேலிடே. 1312.

இட்ட இதழ்கள் இடைஅந் தரத்திலே
அட்டஹவ் விட்டதின்மேலே உவ்விட்டுக்
கிட்ட இதழ்களின் மேலே கிரோம்சிரோம்
இட்டுவா மத்துஆங்கு கிரோங் கென்று மேவிடே. 1313.

மேவிய சக்கர மீது வலத்திலே
கோவை அடையவே குரோங்கிரோங் கென்றிட்டுத்
தாவில் ரீங் காரத்தால் சக்கரம் சூழ்ந்து
பூவைப் புவனா பதியைப் பின் பூசியே. 1314.

பூசிக்கும் போது புவனா பதிதன்னை
ஆசற்று அகத்தினில் ஆவா கனம்பண்ணிப்
பேசிய பிராணப் பிரதிட்டை யதுசெய்து
தேசுற் றிடவே தியானம் அதுசெய்யே. 1315.

செய்ய திருமேனி செம்பட்டு உடைதானும்
கையிற் படைஅங் குசபாசத் தோடபய
வெய்யில் அணிகலன் இரத்தின மாமேனி
துய்ய முடியும் அவயவத்தில் தோற்றமே. 1316.

தோற்போர்வை நீக்கித் துதித்தடைவிற் பூசித்துப்
பாற்பே னகமந் திரத்தால் பயின்றேத்தி
நாற்பால நாரதா யாசுவா காஎன்று
சீர்ப்பாகச் சேடத்தை மாற்றிப் பின் சேவியே. 1317.

சேவிப் பதன்முன்னே தேவியைஉத் வாகனத்தால்
பாவித்து இதய கமலத்தே பதிவித்துஅங்கு
யாவர்க்கும் எட்டா இயந்திர ராசனை
நீவைத்துச் சேவி நினைந்தது தருமே. 1318.

13.
நவாக்கரி சக்கரம்

நவாக்கரி சக்கரம் நானுரை செய்யின்
நவாக்கரி ஒன்று நவாக்கரி யாக
நவாக்கரி எண்பத் தொருவகை யாக
நவாக்கரி அக்கிலீ சௌமுதல் ஈறே. 1319.

சௌமுதல் அவ்வொரு ஹௌவுட னாங்கிரீம்
கௌவுள் உடையுளும் கலந்திரீம் கிரீமென்று
ஒவ்fவில் எழுங்கிலி மந்திர பாதமாச்
செவ்வுள் எழுந்து சிவாய நமஎன்னே. 1320.

நவாக்கரி யாவது நானறி வித்தை
நவாக்கரி உள்ளெழும் நன்மைகள் எல்லாம்
நவாக்கரி மந்திர நாவுளே ஓத
நவாக்கரி சத்தி நலந்தருந் தானே. 1321.

நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
உரந்தரு வல்வினை உம்மை விட்டோடும்
சிரந்தரு தீவினை செய்வது அகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடும் காணே. 1322.

கண்டிடும் சக்கரம் வௌfளிபொன் செம்பிடை
கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை
வென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே. 1323.

நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறா
நினைத்திடும் சக்கரம் ஆதியும் ஈறு
நினைத்திடும் நெல்லொடு புல்லினை யுள்ளே
நினைத்திடும் அருச்சனை நேர்தரு வாளே. 1324.

நேர்தரும் அத்திரு நாயகி ஆனவள்
யாதொரு வண்ணம் அறிந்திடும் பொற்பூவை
கார்தரு வண்ணம் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே. 1325.

நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் எண்ணிய நாளும்
படர்ந்திடு நாமமும் பாய்கதிர் போல
அடைந்திடு வண்ணம் அடைந்திடு நீயே. 1326.

அடைந்திடும் பொன்வௌfளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடும் ஆதி அருளும் திருவும்
அடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே. 1327.

அறிந்திடு வார்கள் அமரர்க ளாகத்
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடும் வானவன் பாய்புனல் சூடி
முரிந்திடு வானை முயன்றடு வீரே. 1328.

நாபணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
பாரணி யும் ஹிரீ முன்ஸ்ரீமீறாந்
தாரணி யும் புகழ்த் தையல் நல் லாள்தன்னைக்
காரணி யும்பொழில் கண்டுகொள் ளீரே. 1329.

கண்டுகொள் ளும் தனி நாயகி தன்னையும்
மொண்டுகொ ளும்முக வசியம தாயிடும்
பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர்
நின்றுகொ ளும்நிலை பேறுடை யாளையே. 1330.

பேறுடை யாள்தன் பெருமையை எண்ணிடில்
நாடுடை யார்களும் நம்வச மாகுவர்
மாறுடை யார்களும் வாழ்வது தானிலை
கூறுடை யாளையும் கூறுமின் நீரே. 1331.

கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை
ஆறுமின் அண்டத்து அமரர்கள் வாழ்வென
மாறுமின் வையம் வரும்வழி தன்னையும்
தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே. 1332.

சேவடி சேரச் செறிய இருந்தவர்
நாவடி யுள்ளே நவின்றுநின்று ஏத்துவர்
பூவடி யிட்டுப் பொலிய இருந்தவர்
மாவடி காணும் வகையறி வாரே. 1333.

ஐம்முத லாக வளர்ந்தெழு சக்கரம்
ஐம்முத லாக அமர்ந்திரீம் ஈறாகும்
அம்முத லாகி அவர்க்குஉடை யாள்தனை
மைம்முத லாக வழுத்திடு நீயே. 1334.

வழுத்திடு நாவுக் கரசிவன் தன்னைப்
பகுத்திடும் வேதமெய் ஆகமம் எல்லாம்
தொகுத்தொரு நாவிடை சொல்லவல் லாளை
முகத்துளும் முன்னெழக் கண்டுகொள் ளீரே. 1335.

கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில்
கொண்டஇம் மந்திரம் கூத்தன் குறியதாம்
மன்றினுள் வித்தையும் மானுடர் கையதாய்
வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே. 1336.

மெல்லியல் ஆகிய மெய்ப்பொரு ளாள்தன்னைச்
சொல்லிய லாலே தொடர்ந்தங்கு இருந்திடும்
பல்லிய லாகப் பரந்தெழு நாள்பல
நல்லியல் பாலே நடந்திடுந் தானே. 1337.

நடந்திடு நாவினுள் நன்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள் தானும்
நடந்திடும் கல்விக் கரசிவ ளாகப்
படர்ந்திடும் பாரில் பகையில்லை தானே. 1338.

பகையில்லை கௌமுத லயது வீறா
நகையில்லை சக்கரம் நன்றறி வார்க்கு
மிகையில்லை சொல்லிய பல்லுறு எல்லாம்
வகையில்லை யாக வணங்கிடம் தானே. 1339.

வணங்கிடும் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடு நல்லுயி ரானவை எல்லாம்
நலங்கிடும் காம வெகுளி மயக்கந்
துலங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே. 1340.

தானே கழறித் தணியவும் வல்லனாய்த்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
தானே தனிநடங் கண்டவள் தன்னையும்
தானே வணங்கித் தலைவனும் ஆமே. 1341.

ஆமே அமைத்துயிராகிய அம்மையும்
தாமே சகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே அவளடி போற்றி வணங்கிடிற்
போமே வினைகளும் புண்ணியன் ஆகுமே. 1342.

புண்ண்iய னாகிப் பொருந்தி உலகெங்கும்
கண்ணிய னாகிக் கலந்தங்கு இருந்திடும்
தண்ணிய னாகித் தரணி முழுதுக்கும்
அண்ணிய னாகி அமர்ந்திருந் தானே. 1343.

தானது கிரீம் கௌவது ஈறாம்
நானது சக்கரம் நன்றறி வார்க்கெல்லாம்
கானது கன்னி கலந்த பராசக்தி
கேளது வையங் கிளரொளி யானதே. 1344.

iக்கும் பராசக்தி உள்ளே அமரில்
களிக்கும் இச் சிந்தையில் காரணம் காட்டித்
தௌiக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்துகொள் வார்க்கே. 1345.

அறிந்திடும் சக்கரம் அருச்சனை யோடே
எறிந்திடும் வையத்து இடரவை காணின்
மறிந்திடு மன்னனும் வந்தனை செய்யும்
பொறிந்திடும் சிந்தை புகையில்லை தானே. 1346.

புகையில்லை சொல்லிய பொன்னொளி யுண்டாம்
குகையில்லை கொல்வது இலாமையி னாலே
வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாம்
சிகையில்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே. 1347.

சேர்ந்தவர் என்றும் திசையொளி யானவர்
காய்ந்தெழு மேல்வினை காண்கி லாதவர்
பாய்ந்தெழும் உள்ளளி பாரிற் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறொளி தானே. 1348.

iயது ஹௌமுன் கிரீமது ஈறாம்
களியது சக்கரம் கண்டறி வார்க்குத்
தௌiவது ஞானமும் சிந்தையும் தேறப்
பணிவது பஞ்சாக் கரமது வாமே. 1349.

ஆமே சதாசிவ நாயகி யானவள்
ஆமே அதோமுகத்துள் அறி வானவள்
ஆமே சுவைஔi ஊறுஓசை கண்டவள்
ஆமே அனைத்துயிர் தன்னுளும் ஆமே. 1350.

தன்னுளும் ஆகித் தரணி முழுதுங்கொண்டு
என்னுளும் ஆகி இடம்பெற நின்றவள்
மண்ணுளும் நீர்அனல் காலுளும் வானுளும்
கண்ணுளும் மெய்யுளும் காணலும் ஆமே. 1351.

காணலும் ஆகும் கலந்துயிர் செய்வன
காணலும் ஆகும் கருத்துள் இருந்திடின்
காணலும் ஆகும் கலந்து வழிசெயக்
காணலும் ஆகும் கருத்துற நில்லே. 1352.

நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டிடும் உள்ளம் கலந்தெங்கும் தானாகக்
கொண்டிடும் வையம் குணம்பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே. 1353.

மெய்ப்பொருள் ஔமுதல் ஹௌவது ஈறாக்
கைப்பொரு ளாகக் கலந்தெழு சக்கரம்
தற்பொரு ளாகச் சமைந்தமு தேஸ்வரி
நற்பொரு ளாக நடுவிருந் தாளே. 1354.

தாளதின் உள்ளே சமைந்தமு தேஸ்வரி
காலது கொண்டு கலந்துற வீசிடில்
நாளது நாளும் புதுமைகள் கண்டபின்
கேளது காயமும் கேடில்லை காணுமே. 1355.

கேடில்லை காணும் கிளரொளி கண்டபின்
நாடில்லை காணும் நாண்முதல் அற்றபின்
மாடில்லை காணும் வரும்வழி கண்டபின்
காடில்லை காணும் கருத்துற்று இடத்துக்கே. 1356.

உற்றிடம் எல்லாம் உலப்பில்பா ழாக்கிக்
கற்றிடம் எல்லாம் கடுவௌi யானது
மற்றிடம் இல்லை வழியில்லை தானில்லைச்
சற்றிடம் இல்லை சலிப்பற நின்றிடே. 1357.

நின்றிடும் ஏழ்கடல் ஏழ்புவி எல்லாம்
நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானொக்கும்
நின்றிடும் சத்தி நிலைபெறக் கண்டிட
நின்றிடும் மேலை விளக்கொளி தானே. 1358.

விளக்கொளி ஸௌமுதல் ஔவது ஈறா
விளக்கொளி சக்கரம் மெய்ப்பொரு ளாகும்
விளக்கொளி யாகிய மின்கொடி யானை
விளக்கொளி யாக விளங்கிடு நீயே. 1359.

விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடு மெல்லிய லானது வாகும்
விளங்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே. 1360.

தானே வௌiயென எங்கும் நிறைந்தவன்
தானே பரம வௌiயது வானவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவன்
தானே அனைத்துள அண்ட சகலமே. 1361.

அண்டத்தி னுள்ளே அளப்பரி யானவன்
பிண்டத்தி னுள்ளே பெருபௌi கண்டவன்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தில் நின்ற கலப்பறி யார்களே. 1362.

கலப்பறி யார்கடல் சூழ்உலகு எல்லாம்
உலப்பறி யாருடல் ஓடுயிர் தன்னைச்
சிலப்பறி யார்சில தேவரை நாடித்
தலைப்பறி யாகச் சமைந்தவர் தானே. 1363.

தானே எழுந்த அச்சக்கரம் சொல்லிடின்
மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்
தேனே இரேகை திகைப்பற ஒன்பதில்
தானே கலந்த வறை எண்பத் தொன்றுமே. 1364.

ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்
வென்றிகொள் மேனி மதிவட்டம் பொன்மையாம்
கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில்
என்றியல் அம்மை எழுத்தலை பச்சையே. 1365.

ஏய்ந்த மரவுரி தன்னில் எழுதிய
வாய்ந்தஇப் பெண்எண்பத் தொன்றில் நிரைத்தபின்
காய்ந்தவி நெய்யுள் கலந்துடன் ஓமமும்
ஆம்தலத்து ஆமுயிர் ஆகுதி பண்ணுமே. 1366.

பண்ணிய பொன்னைப் பரப்பற நீபிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்தபின்
துண்ணென நேயநற் நோக்கலும் ஆமே. 1367.

ஆகின்ற சந்தனம் குங்குமம் கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகுநெய்
ஆகின்ற கற்பூரம் ஆகோ சனநீரும்
சேர்கின்ற ஒன்பதும் சேரநீ வைத்திடே. 1368.

வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில்
கைச்சிறு கொங்கை கலந்தெழு கன்னியைத்
தச்சிது வாகச் சமைந்தஇம் மந்திரம்
அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே. 1369.

சிந்தையின் உள்ளே திகழ்தரு சோதியாய்
எந்தை கரங்கள் இருமூன்றும் உள்ளது
பந்தமா சூலம் படைபாசம் வில்லம்பு
முந்தை கிலீம்எழ முன்னிருந் தாளே. 1370.

இருந்தனர் சத்திகள் அறுபத்தி நால்வர்
இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர்
இருந்தனர் சூழ எதிர்சக் கரத்தே
இருந்த கரம்சூழ வில்லம்பு கொண்டே. 1371.

கொண்ட கனகம் குழைமுடி யாடையாய்க்
கண்டஇம் மூர்த்தம் கனல்திரு மேனியாய்ப்
பண்டமர் சோதிப் படரிதழ் ஆனவள்
உண்டு அங்கு ஒருத்தி உணரவல் லாருக்கே. 1372.

உணர்ந்திருந் துள்ளே ஒருத்தியை நோக்கில்
கலந்திருந்து எங்கும் கருணை பொழியும்
மணந்தெழும் ஓசை ஔiயது காணும்
தணந்தெழு சக்கரம் தான்தரு வாளே. 1373.

தருவழி யாகிய தத்துவ ஞானம்
குருவழி யாகும் குணங்களுள் நின்று
கருவழி யாகும் கணக்கை அறுத்துப்
பெருவழி யாக்கும் பேரொளி தானே. 1374.

பேரொளி யாய பெரிய பெருஞ்சுடர்
சீரொளி யாகித் திகழ்தரு நாயகி
காரொளி யாகிய கன்னிகை பொன்னிறம்
பாரொளி யாகிப் பரந்துநின் றாளே. 1375.

பரந்த கரம்இரு பங்கயம் ஏந்திக்
குவிந்த கரம்இரு கொய்தளிர்ப் பாணி
பரிந்தருள் கொங்கைகண் முத்தார் பவளம்
இருந்தநல் லாடை மணிபொதிந் தன்றே. 1376.

மணிமுடி பாதம் சிலம்பணி மங்கை
அணிபவள் அன்றி அருளில்லை யாகும்
தணிபவர் நெஞ்சினுள் தன்னருள் ஆகிப்
பணிபவர்க்கு அன்றோ பரிகதி யாமே. 1377.

பரந்திருந்து உள்ளே அறுபது சத்தி
கரந்தன கன்னிகள் அப்படிச் சூழ
மலர்ந்திரு கையின் மலரவை ஏந்தச்
சிறந்தவர் ஏத்தும் சிறீம்தன மாமே. 1378.

தனமது வாகிய தையலை நோக்கி
மனமது ஓடி மரிக்கிலோர் ஆண்டில்
கனமவை யற்றுக் கருதிய நெஞ்சம்
தினகரன் ஆரிட செய்திய தாமே. 1379.

ஆகின்ற மூலத்து எழுந்த முழுமலர்
போகின்ற பேரொளி யாய மலரதாய்ப்
போகின்ற பூரண மாக நிறைந்தபின்
சேர்கின்ற செந்தழல் மண்டல மானதே. 1380.

ஆகின்ற மண்டலத்து உள்ளே அமர்ந்தவள்
ஆகின்ற ஐம்பத்து அறுவகை யானவள்
ஆகின்ற ஐம்பத்து அறுசத்தி நேர்தரு
ஆகின்ற ஐம்பத்து அறுவகை சூழவே. 1381.

சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமாய்
ஆங்கணி முத்தம் அழகிய மேனியும்
தாங்கிய கையவை தார்கிளி ஞானமாய்
ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே. 1382.

பாசம தாகிய வேரை யறுத்திட்டு
நேசம தாக நினைத்திரும் உள்முளே
நாசம தெல்லாம் நடந்திடும் ஐயாண்டில்
காசினி மேலமர் கண்ணுதல் ஆகுமே. 1383.

கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி
பண்ணுறு நாதம் பகையற நின்றிடில்
விண்ணமர் சோதி விளங்க ஹிரீங்கார
மண்ணுடை நாயகி மண்டல மாகுமே. 1384.

மண்டலத்து உள்ளே மலர்ந்தெழு தீபத்தை
கண்டகத்து உள்ளே கருதி யிருந்திடும்
விண்டகத்து உள்ளே விளங்கி வருதலால்
தண்டகத்து உள்ளவை தாங்கலும் ஆமே. 1385.

தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்து
ஓங்கி எழுங்கலைக்கு உள்ளுணர் வானவள்
ஏங்க வரும்பிறப்பு எண்ணி அறுத்திட
வாங்கிய நாதம் வலியுடன் ஆகுமே. 1386.

நாவுக்கு நாயகி நன்மணி பூணாரம்
பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாம்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தள்
ஆவுக்கு நாயகி அங்கமர்ந் தாளே. 1387.

அன்றிரு கையில் அளந்த பொருள்முறை
இன்றிரு கையில் எடுத்தவெண் குண்டிகை
மன்றது காணும் வழியது வாகவே
கண்டுஅங்கு இருந்தவர் காரணி காணுமே. 1388.

காரணி சத்திகள் ஐம்பத்து இரண்டெனக்
காரணி கன்னிகள் ஐம்பத்து இருவராய்க்
காரணி சக்கரத்து உள்ளே கரந்தெங்கம்
காரணி தன்னருள் ஆகிநின் றாளே. 1389.

நின்றஇச் சத்தி நிலைபெற நின்றிடில்
கண்டஇவ் வன்னி கலந்திடும் ஓராண்டில்
கொண்ட விரதநீர் குன்றாமல் நின்றிடின்
மன்றினில் ஆடும் மணியது காணுமே. 1390.

கண்ட இச்சத்தி இருதய பங்கயம்
கொண்டஇத் தத்துவ நாயகி யானவள்
பண்டையவ் வாயுப் பகையை அறுத்திட
இன்றென் மனத்துள் இனிதிருந் தாளே. 1391

இருந்தஇச் சத்தி இருநாலு கையில்
பரந்தஇப் பூங்கிளி பாச மழுவாள்
கரந்திடு கேடதும் வில்லம்பு கொண்டங்கு
குரந்தங்கு இருந்தவள் கூத்துகந் தாளே. 1392

உகந்தனள் பொன்முடி முத்தார மாகப்
பரந்த பவளமும் பட்டாடை சாத்தி
மலர்ந்தெழு கொங்கை மணிக்கச்சு அணிந்து
தழைந்தங்கு இருந்தவள் தான்பச்சை யாமே. 1393

பச்சை இவளுக்கு பாங்கிமார் ஆறெட்டு
கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால்
கூச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய்
எச்ச இடைச்சி இனிதிருந் தாளே. 1394.

தாளதின் உள்ளே தாங்கிய சோதியைக்
காலது வாகக் கலந்து கம் ஜம்f என்று
மாலது வாக வழிபாடு செய்துநீ
பாலது போலப் பரந்தெழு விண்ணிலே. 1395

விண்ணமர் நாபி இருதயம் ஆங்கிடைக்
கண்ணமர் கூபம் கலந்து வருதலால்
பண்ணமர்ந்து ஆதித்த மண்டல மானது
தண்ணமர் கூபம் தழைத்தது காணுமே. 1396.

கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள
தாபத்துச் சத்தி தயங்கி வருதலால்
ஆபத்துக் கைகள் அடைந்தனநாலைந்து
பாசம் அறுக்கப் பரந்தன சூலமே. 1397

சூலம்தண்டு ஓள்வாள் சுடர்பறை ஞானமாய்
வேல்அம்பு தமருகம் மாகிளி விற்கொண்டு
காலம்பூப் பாசம் மழுகத்தி கைக்கொண்டு
கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே. 1398

எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன்
எண்ணமர் சத்திகள் நாற்பத்து நால்வராம்
எண்ணிய பூவிதழ் உள்ளே இருந்தவள்
எண்ணிய எண்ணம் கடந்துநின் றாளே. 1399

கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு
தொடர்ந்தணி முத்து பவளம்கச் சாகப்
படர்ந்தல்குல்பட்டாடை பாதச் சிலம்பு
மடந்தை சிறியவள் வந்துநின் றாளே. 1400.

நின்ற இச்சத்தி நிரந்தர மாகவே
கண்டிடு மேரு அணிமாதி தானாகிப்f
பண்டைய ஆனின் பகட்டை அறுத்திட
ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்குண் டாமே. 1401

உண்டோர் அதோமுகம் உத்தம மானது
கண்டஇச் சத்தி சதாசிவ நாயகி
கொண்ட முகம்ஐந்து கூறும் கரங்களும்
ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானதே. 1402

நன்மணி சூலம் கபாலம் கிளியுடன்
பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகும்
கன்மணி தாமரை கையில் தமருகம்
பொன்மணி பூணாரம் பூசனை யானதே. 1403

பூசனைச் சத்திகள் எண்ஐவர் சூழவே
நேசவன் கன்னிகள் நாற்பத்து நேரதாய்க்
காசினைச் சக்கரத் துள்ளே கலந்தவள்
மாசடை யாமல் மகிழ்ந்திருந் தார்களே. 1404

தாரத்தின் உள்ளே தங்கிய சோதியைப்
பாரத்தின் உள்ளே பரந்து எழுந்திட
வேரது ஒன்றிநின்று எண்ணு மனோமயம்
காரது போலக் கலந்தெழு மண்ணிலே 1405

மண்ணில் எழுந்த அகார உகாரங்கள்
விண்ணில் எழுந்து சிவாய நமவென்று
கண்ணில் எழுந்தது காண்பரிது அன்றுகொல்
கண்ணில் எழுந்தது காட்சிதர என்றே. 1406

என்றுஅங்கு இருந்த அமுத கலையிடைச்
சென்றுஅங்கு இருந்த அமுத பயோதரி
கண்டம் கரம்இரு வௌfளிபொன் மண்ணடை
கொண்டங்கு இருந்தது வண்ணம் அமுதே. 1407

அமுதம தாக அழகிய மேனி
படிகம தாகப் பரந்தெழும் உள்ளே
குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக்
கெழுதம தாகிய கேடிலி தானே. 1408

கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும்
நாடிலி கன்னிகள் நால்ஒன் பதின்மரும்
பூவிலி பூவிதழ் உள்ளே இருந்தவர்
நாளிலி தன்னை நணுகிநின் றார்களே. 1409

நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்டது சோதி கருத்துள் இருந்திடக்
கொண்டது ஓராண்டு கூடி வருகைக்கு
விண்டஔ காரம் விளங்கின அன்றே. 1410

விளங்கிடு வானிடை நின்றலை எல்லாம்
வணங்கிடு மண்டலம் மன்னுயி ராக
நலங்கிளர் நன்மைகள் நாரணன் ஒத்துக்
கணங்கிடை நின்றவை சொல்லலும் ஆமே. 1411

ஆமே ஆதோமுக மேலே அமுதமாய்த்
தாமே உகாரம் தழைத்தெழும் சோமனும்
காமேல் வருகின்ற கற்பக மானது
பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே. 1412.

பொற்கொடி யாளுடைப் பூசனை செய்திட
அக்களி யாகிய ஆங்காரம் போயிடும்
மற்கட மாகிய மண்டலம் தன்னுள்ளே
பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே. 1413

பேதை இவளுக்குப் பெண்மை அழகாகும்
தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்
மானத அவளுக்கு மண்ணும் திலகமாய்
கோதையர் சூழக் குவிந்திங் காணுமே. 1414

குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர்
நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்
பரந்திதழ் ஆகிய பங்கயத் துள்ளே
இருந்தனள் காணும் இடம்பல கொண்டே. 1415

கொண்டங்கு இருந்தனர் கூத்தன் ஔiயினைக்
கண்டங்கு இருந்தனர் காரணத்து உள்ளது
பண்டை மறைகள் பரந்தெங்கும் தேடுமால்
இன்றுஎன் மனத்துள்ளே இல்லடைந்து ஆளுமே. 1416

இல்லடைந் தானுக்கும் இல்லாதது ஒன்றில்லை
இல்லடைந் தானுக்கு இரப்பது தானில்லை
இல்லடைந் தானுக்கு இமையவர் தாம்ஒவ்வர்
இல்லடைந் தானுக்கு இல்லாதுஇல் ஆனையே. 1417

ஆனை மயக்கும் அறுபத்து நால்தறி
ஆனை யிருக்கும் அறுபத்து நால்ஔi
ஆனை யிருக்கும் அறுபத்து நால்அறை
ஆனையும் கோடும் அறுபத்து நாலிலே. 1418.

நான்காம் தந்திரம் முற்றிற்று

10ம் திருமுறை

திருமந்திரம் (திருமூலர் அருளியது)
ஐந்தாம் தந்திரம் (1419 - 1572)

1. சுத்த சைவம்

ஊரும் உலகமும் ஓக்கப் படைக்கின்ற
பேரறி வாளன் பெருமை குறித்திடின்
மேருவும் மூவுல காளி யிலங்கெழுந்
தாரணி நால்வகைச் சைவமு மாமே. 1419

சத்தும் அசத்துஞ் சதசத்துந் தான்கண்டு
சித்தும் அசித்துஞ் சேர்வுறா மேநீத்த
சுத்தம் அசுத்தமுந் தோய்வுறா மேநின்று
நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே. 1420

கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்
முற்பத ஞான முறைமுறை நண்ணியே
சொற்பத மேவித் துரிசற்று மேலான
தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே. 1421

வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்த
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
புதாந்த போதாந்த மாதுப் புனஞ்செய்ய
நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே. 1422

2.
அசுத்த சைவம்

இணையார் திருவடி ஏத்துஞ் சீரங்கத்
தினையார் இணைக்குழை யீரணை முத்திரை
குணமா ரிணைக்கண்ட மாலையுங் குன்றா
தணைவாஞ் சரியை கிரியையி னார்க்கே. 1423.

காதுப்பொ னார்ந்த கடுக்கன் இரண்டுசேர்த்
தோதுந் திருமேனி யுட்கட் டிரண்டுடன்
சோதனை செய்து துவாதெச மார்க்கராய்
ஓதி யிருப்பார் ஒருசைவ ராகுமே. 1424

கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதுங் கண்டாய் அரும்பொருள்
கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டமாங்
கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே. 1425

ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்
மோன திசையும் முழுஎண்ணெண் சித்தியும்
ஏனை நிலமும் எழுதா மறையீறுங்
கோனொடு தன்னையுங் காணுங் குணத்தனே. 1426

3.
மார்க்க சைவம்

பொன்னாற் சிவசாத னம்பூதி சாதனம்
நன்மார்க்க சாதனம் மாஞான சாதனந்
துன்மார்க்க சாதனந் தோன்றாத சாதனஞ்
சன்மார்க்க சாதன மாஞ்சுத்த சைவர்க்கே. 1427

கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின்
ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன்
பாடுறு சத்தசை வப்பத்த நித்தனே. 1428.

ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழு
மோகமில் நாலேழு முப்பேத முற்றுடன்
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மேயொன்
றாக முடிந்த வருஞ்சுத்த சைவமே. 1429

சுத்தம் அசுத்தந் துரியங்கள் ஓரேழுஞ்
சத்தும் அசத்துந் தணந்த பராபரை
உய்த்த பராபரை யுள்ளாம் பராபரை
அத்தன் அருட்சத்தி யாய்எங்கு மாமே. 1430

சத்தும் அசுத்துந் தணந்தவர் தானாகிச்
சித்தும் அசித்துந் தெரியாச் சிவோகமாய்
முத்தியுள் ஆனந்த சத்தியுள் மூழ்கினார்
சித்தியு மங்கே சிறந்துள தானே. 1431

தன்னைப் பரனைச் சதாசிவன் என்கின்ற
மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற
முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை
உன்னத் தகுஞ்சுத்த சைவர் உபாயமே. 1432.

பூரணம் தன்னிலே வைத்தற்ற வப்போதே
மாரண மந்த மதித்தானந் தத்தோடு
நேரென ஈராறு நீதி நெடும் போகங்
காரண மாஞ்சுத்த சைவர்க்குக் காட்சியே. 1433

மாறாத ஞான மதிப்பற மாயோகந்
தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்
பேறான பாவனை பேணி நெறிநிற்றல்
கூறாகு ஞானி சரிதை குறிக்கிலே. 1434

வேதாந்தங் கண்டோர் பிரமமித் தியாதரர்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்
வேதாந்த மல்லாத சித்தாந்தங் கண்டுளோர்
சாதா ரணமன்ன சைவர் உபாயமே. 1435

விண்ணினைச் சென்றணு காவியன் மேகங்கள்
கண்ணினைச் சென்றணு காப்பல காட்சிகள்
எண்ணினைச் சென்றணு காம லெணப்படும்
அண்ணலைச் சென்றணு காபசு பாசமே. 1436

ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராகார நீங்கியே
நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற்
சென்று சிவமாதல் சித்தாந்த சித்தியே. 1437

4.
கடுஞ் சுத்த சைவம்

வேடம் கடந்து விகிர்தன்தன் பால்மேனி
ஆடம் பரமின்றி ஆசாபா சம்செற்றுப்
பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்
சாடும் சிவபோ தகர்சுத்த சைவரே. 1438.

உடலான ஐந்தையும் ஓராறும் ஐந்து
மடலான மாமாயை மற்றுள்ள நீவப்
படலான கேவல பாசந் துடைத்துத்
திடமாய்த் தனையுறல் சித்தாந்த மார்க்கமே. 1439

சுத்தச் சிவனுரை தானத்தில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம்
அத்தகை யான்மா அரனை அடைந்தற்றாற்
சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே. 1440.

நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டிலாத் தற்பதந்
தானென்று நானென்ற தத்துவ நல்கலால்
தானென்று நானென்றுஞ் சாற்றகில் லேனே. 1441.

சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே. 1442

5.
சரியை

நேர்ந்திடு மூல சரியை நெறியிதென்
றாய்ந்திடுங் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத்
தோர்ந்திடுஞ் சுத்த சைவத் துயிரதே. 1443

உயிர்க்குயி ராய்நிற்றல் ஒண்ஞான பூசை
உயிர்க்கொளி நோக்கல் மகாயோக பூசை
உயிர்ப்பெறு மாவா கனம்புறப் பூசை
செயிற்கடை நேசஞ் சிவபூசை யாமே. 1444.

நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந்
தேடித் திரிந்து சிவபெரு மான்என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே. 1445.

பத்தர் சரிதை படுவோர் கிரியையோர்
அத்தகு தொண்டர் அருள்வேடத் தாகுவோர்
சுத்த வியமாதி சாதகர் தூயோகர்
சித்தர் சிவஞானஞ் சென்றெய்து வோர்களே. 1446.

சார்ந்தமெய்ஞ் ஞானத்தோர் தானவ னாயினோர்
சேர்ந்தவெண் யோகத்தர் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர்
நேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே. 1447

கிரியை யோகங்கள் கிளர்ஞான பூசை
அரிய சிவனுரு அமரும் அரூபந்
தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத் துயர்பூசை யாமே. 1448.

சரியாதி நான்குந் தருஞான நான்கும்
விரிவான வேதாந்த சித்தாந்த மாறும்
பொருளா னதுநந்தி பொன்னகர் போந்து
மருளாகு மாந்தர் வணங்கவைத் தானே. 1449.

சமையம் பலசுத்தித் தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் அரன்மந் திரசுத்தி
சமைய நிருவாணங் கலாசுத்தி யாகும்
அமைமன்னு ஞானமார்க் கம்அபிடேகமே. 1450

6.
கிரியை

பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண்
டெத்திக் கிலரில்லை என்பதின் அமலர்க்
கொத்துத் திருவடி நீழல் சரணெனத்
தத்தும் வினைக்கடல் சாராது காணுமே. 1451

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுறு மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உண்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே. 1452.

கோனக்கன் றாயே குரைகழல் ஏத்துமின்
ஞானக்கன் றாகிய நடுவே யுழிதரும்
வானக்கன் றாகிய வானவர் கைதொழு
மானக்கன் றீசன் அருள்வள்ள மாமே. 1453.

இதுபணிந் தெண்டிசை மண்டிலம் எல்லாம்
அதுபணி செய்கின் றவளரு கூறன்
இதுபணி மானுடர் செய்பணி யீசன்
பதிபணி செய்வது பத்திமை காணே. 1454.

பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசற்ற யோகத்தில்
உய்த்த நெறியுற் றுணர்கின்ற ஞானத்தாற்
சித்தங் குருவரு ளாற்சிவ மாகுமே. 1455.

அன்பின் உருகுவ நாளும் பணிசெய்வன்
செம்பொன்செய் மேனி கமலத் திருவடி
முன்புநின் றாங்கே மொழிவ தெனக்கருள்
என்பினுட் சோதி இலங்குகின் றானே. 1456.

7.
யோகம்

நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
தறியிருந் தாற்போல் தம்மை யிருத்திச்
சொறியினுந் தாக்கினுந் துண்ணென் றுணராக்
குறியறி வாளர்க்குக் கூடலு மாமே. 1457.

ஊழிதோ றூழிஉணர்ந்தவர்க் கல்லால்
ஊழிதோ றூழி உணரவுந் தானொட்டான்
ஆழி அமரும் அரியயன் என்றுளார்
ஊழி முயன்றும் ஒருச்சியு ளானே. 1458.

பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோற்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்தறி வாளர்க்கு
நாவி யணைந்த நடுதறி யாமே. 1459

உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தை யுறவே தெளிந்திருள் நீங்கினால்
முந்தைப் பிறவிக்கு மூலவித் தாமே. 1460.

எழுத்தோடு பாடலும் எண்ணெண் கலையும்
பழித்தலைப் பாசப் பிறவியும் நீங்கா
வழித்தலைச் சோமனோ டங்கி யருக்கன்
வழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தேனே. 1461

விரும்பிநின் றேசெயில் மேய்த்தவ ராகும்
விரும்பிநின் றேசெயின் மெய்யுரை யாகும்
விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும்
விரும்பிநின் றேசெயில் விண்ணவ னாகுமே. 1462

பேணிற் பிறவா உலகருள் செய்திடுங்
காணில் தனது கலவியு ளேநிற்கும்
நாணில் நகர நெறிக்கே வழிசெயும்
ஊனிற் சுடுமங்கி யுத்தமன் றானே. 1463.

ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர்
எத்தனை யாயிரம் வீழ்ந்தனர் எண்ணிலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்த னிவனென்றே அன்புறு வார்களே. 1464

யோகிக்கு யோகாதி மூன்றுள கொண்டுற்றோர்
ஆகத் தருகிரி யாதி சரியையாந்
தாகத்தை விட்ட சரியையொன் றாம்ஒன்றுள்
ஆதித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே. 1465.

யோகச் சமயமே யோகம் பலவுன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோகநிர் வாணமே யுற்ற பரோதயம்
யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே. 1466

8.
ஞானம்

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவா
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே. 1467

சத்தமுஞ் சத்த மனனும் தகுமனம்
உய்த்த வுணர்வு முணர்த்தும் அகந்தையுஞ்
சித்தமென் றிம்மூன்றுஞ் சிந்திக்குஞ் செய்கையுஞ்
சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே. 1468

தன்பால் உலகுந் தனக்கரு காவதும்
அன்பா லெனக்கரு ளாவது மாவன
என்பார்கள் ஞானமும் எய்துஞ் சிவோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே. 1469

இருக்குஞ் சேம இடம்பிரமமாகும்
வருக்கஞ் சராசர மாகும் உலகந்
தருக்கிய ஆசார மெல்லாந் தருமே
திருக்கிலாஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே. 1470

அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியுங் குணமுங் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீர்த்தொனி யாமே. 1471

ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
ஏனம் விளைந்தெதி ரேகாண வழிதோறுங்
கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு
ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே. 1472

ஞானிக் குடன்குண ஞானத்தில் நான்குமா
மோனிக் கிவையொன்றுங் கூடாமுன் மோகித்து
மேனிற்ற லாஞ்சத்தி வித்தை விளைத்திடுந்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே. 1473

ஞானத்தின் ஞானாதி நான்குமா ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நானென தென்னாமல்
ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி
ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே. 1474

நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவங் கடந்த பிணக்கற்றோன்
கண்ணிய நேயங் கரைஞானங் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே. 1475

ஞானச் சமயமே நாடுந் தனைக் காண்டல்
ஞான விசேடமே நாடு பரோதய
ஞானநிர் வாணமே நன்றறி வானருள்
ஞானாபி டேகமே நற்குறு பாதமே. 1476

9.
சன்மார்க்கம்

சாற்றுஞ்சன் மார்க்கமாந் தற்சிவ தத்துவத்
தோற்றங் களான சுருதிச் சுடர்கண்டு
சீற்றம் ஒழிந்து சிவயோக சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறிந் தார்களே. 1477

சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி நன்மார்க்கஞ் சேர்ந்துய்ய
வையத்துள் ளார்க்கு வகுத்தவைத் தானே. 1478.

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யுங் குவலயத் தோர்க்குத்
தருமுத்திச் சார்பூட்டுஞ் சன்மார்க்கந் தானே. 1479

தெளிவறி யாதார் சிவனை யறியார்
தெளிவறி யாதார் சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரார் பிறப்பே. 1480

தானவ னாகித் தானைந்தா மலஞ்செற்று
மோனம தாம்மொழிப் பான்முத்த ராவது
மீனமில் ஞானானு பூதியில் இன்பமுந்
தாவை னாயுறலானசன் மார்க்கமே. 1481

சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமுஞ்
சன்மார்க்கத் தார்க்கும் இடத்தொடு தெய்வமுஞ்
சன்மார்க்கத் தார்க்கு வருக்கந் தரிசனம்
எம்மார்க்கத் தார்க்கும் இயம்புவன் கேண்மினோ. 1482

சன்மார்க்க சாதனந் தான்ஞான ஞேயமாம்
பின்மார்க்க சாதனம் பேதையர்க்காய்நிற்கும்
துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்க்கந் தானவ னாகுஞ்சன் மார்க்கமே. 1483

சன்மார்க்க மெய்த வருமருஞ் சீடர்க்குப்
பின்மார்க்க மூன்றும் பெறவியல் பாமென்றால்
நன்மார்க்கந் தானே சிவனொடு நாடலே
சொன்மார்க்க மென்னச்சுருதிகைக்கொள்ளுமே. 1484

அன்னிய பாசமும் ஆகுங் கருமமும்
முன்னும் அவத்தையும் மூலப் பகுதியும்
பின்னிய ஞானமும் பேதாதி பேதமுந்
தன்னொடுங் கண்டவர் சன்மார்க்கத் தோரே. 1485

பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிப்
கசியாத நெஞ்சங் கசியக் கசிவித்
தொசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற்
றசைவான தில்லாமை யானசன் மார்க்கமே. 1486

மார்க்கஞ்சன் மார்க்கிகள் கிட்ட வகுப்பது
மார்க்கஞ்சன் மார்க்கமே யன்றிமற் றொன்றில்லை
மார்க்கஞ்சன் மார்க்க மெனுநெறி வைகாதோர்
மார்க்கஞ்சன் மார்க்க மாஞ்சித்த யோகமே. 1487

10.
சகமார்க்கம்

சன்மார்க்கந் தானே சகமார்க்க மானது
மனமார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம்
பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந்
துன்மார்க்க ஞானத் துறதியு மாமே. 1488

மருவுந் துவாதச மார்க்கமில் லாதார்
குருவுஞ் சிவனுஞ் சமயமுங் கூடாம்
வெருவுந் திருமகள் வீட்டில்லை யாகும்
உருவுங் கிளையும் ஒருங்கிழப் பாரே. 1489

யோகச் சமாதியின் உள்ளே யகலிடம்
யோகச் சமாதியின் உள்ளே யுளரொளி
யோகச் சமாதியின் உள்ளே யுளசத்தி
யோகச் சமாதி யுகந்தவர் சித்தரே. 1490

யோகமும் போகமும் யோகியர்க் காகுமால்
யோகஞ் சிவரூபம் உற்றிடும் உள்ளத்தோர்
போகம் புவியிற் புருடார்த்த சித்திய
தாகும் இரண்டும் அழியாத யோகிக்கே. 1491

ஆதார சோதனை யானாடி சுத்திகள்
மேதாதி யீரெண் கலாந்தத்து விண்ணொளி
போதா லயத்துப் புலன்கர ணம்புந்தி
சாதா ரணங்கெட லாஞ்ச மார்க்கமே. 1492

பிணங்கிநிற் கின்றவை ஐந்தையும் பின்னை
அணங்கி யெறிவ னயிர்மன வாளாற்
கணம்பதி னெட்டுங் கருதும் ஒருவன்
வணங்கவல் லான் சிந்தை வந்துநின் றானே. 1493

வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்
வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும்
உளங்கனிந் துள்ள முகந்திருப் பார்க்குப்
பழங்கனிந் துள்ளே பகுந்துநின் றானே. 1494

11.
சற்புத்திர மார்க்கம்

மேவிய சற்புத்திர மார்க்க மெய்த்தொழில்
தாவிப்ப தாஞ்சக மார்க்கம் சகத்தொழில்
ஆவ திரண்டும் அகன்று சகமார்க்கத்
தேவியோ டொன்றல் சன்மார்க்கத் தெளிவதே. 1495

பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட் டன்னமும் நீசுத்தி செய்தன்மர்
றாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே. 1496

அறுகாற் பறவை அலர்தேர்ந் துழலும்
மறுகா நரையன்னந் தாமரை நீலங்
குறுகா நறுமலர் கொய்வன கண்டுஞ்
சிறுகால் அறநெறி சேர்கி லாரே. 1497

அருங்கரை யாவது அவ்வடி நீழற்
பெருங்கரை யாவது பிஞ்ஞக னாணை
வருங்கரை யேகின்ற மன்னுயிர்க் கெல்லாம்
ஒருங்கரை யாயுல கேழினொத் தானே. 1498

உயர்ந்தும் பணிந்தும் முகந்துந் தழுவி
வியந்தும் அரனடிக் கேமுறை செய்மின்
பயந்தும் பிறவிப் பயனது வாகும்
பயந்து பிரிக்கிலப் பான்மையு னாமே. 1499

நின்றுதொழுவன் கிடந்தெம் பிரான்தன்னை
என்றுந் தொழுவன் எழிற்பரஞ் சோதியைத்
துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தோறுஞ்
சென்று வெளிப்படுந் தேவர் பிரானே. 1500

திருமன்னுஞ் சற்புத் திரமார்க்கச் சரியை
உருமன்னி வாழும் உலகத்தீர்கேண்மின்
கருமன்னு பாசங் கைகூம்பத் தொழுது
இருமன்னு நாடோறும் இன்புற் றிருந்தே. 1501

12.
தாச மார்க்கம்

எளியனல் தீப miடல்மலர் கொய்தல்
அளிதின் மெழுக லதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி
தளிதொழில் செய்வது தான்தாசமார்க்கமே. 1502

அதுவிது வாதிப் பரமென் றகல்வர்
இதுவழி யென்றங் கிறைஞ்சின ரில்லை
விதிவழி யேசென்று வேந்தனை நாடு
மதுவிது நெஞ்சில் தணிக்கின்ற வாறே. 1503

அந்திப்பன் திங்க ளதன்பின்பு ஞாயிறு
சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்ப வானவர் தேவனை நாடோறும்
வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே. 1504

அண்ணலை வானவர் ஆயிரம் பேர்சொல்லி
உன்னுவர் உள்மகிழ்ந்துண்ணின் றடிதொழக்
கண்ணவ னென்று கருது மவர்கட்குப்
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே. 1505

வாசித்தும் பூசித்தும்மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம்பார்க்கின்
மாசற்ற சோதி மணிமிடற் றாண்ணலை
நேசத் திருந்த நினைவறி யாரே. 1506

13.
சாலோகம்

சாலோக மாதி சரியாதி யிற்பெறுஞ்
சாலோகஞ் சாமீபந் தங்குஞ் சரியையால்
மாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம்
பாலோகம் இல்லாப் பரனுரு வாமே. 1507

சமயங் கிரியையிற் றன்மனங் கோயில்
சமய மனுமுறை தானே விசேடஞ்
சமயத்து மூலந் தனைத்தேறன் மூன்றாஞ்
சமயாபி டேகந் தானாஞ் சமாதியே. 1508

14.
சாமீபம்

பாசம் பசுவான தாகும்இச் சாலோகம்
பாச மருளான தாகும்இச் சாமீபம்
பாசஞ் சிரமான தாகும்இச் சாரூபம்
பாசங் கரைபதி சாயுச் சியமே. 1509

15.
சாரூபம்

தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந்
தங்குஞ்சன்மார்க்கந் தனிலன்றிக் கைகூடா
அங்கத் துடல்சித்தி சாதன ராகுவர்
இங்கிவ ராக விழிவற்ற யோகமே. 1510

சயிலலோ கத்தினைச் சார்ந்த பொழுதே
சயிலம தாகுஞ் சராசரம் போலப்
பயிலுங் குருவின் பதிபுக்க போதே
கயிலை இறைவன் கதிர்வடி வாமே. 1511

16.
சாயுச்சியம்

சைவஞ் சிவனுடன் சம்பந்த மாவது
சைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல்
சைவஞ் சிவந்தன்னைச் சாராமல் நீங்குதல்
சைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே. 1512

சாயுச் சியஞ்சாக் கிராதீதஞ் சாருதல்
சாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதற்
சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்
சாயுச் சியமனத் தானந்த சத்தியே. 1513

17.
சத்திநிபாதம்

மந்தம்

இருட்டறை மூலை யிருந்த கிழவி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
மருட்டி யவனை மணம்புரிந் தாளே. 1514

தீம்புல னான திசையது சிந்திக்கில்
ஆம்புல னாயறிவார்க்கமு தாய்நிற்குந்
தேம்புல னான தெளிவறி வார்கட்குக்
கோம்புல னாடிய கொல்லையு மாமே. 1515.

இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி
அருள்நீங்கா வண்ணமே யாதியருளும்
மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப்
பொருள்நீங்கா இன்பம் புலம்பயல் தானே. 1516

இருள்சூ ழறையில் இருந்தது நாடிற்
பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போன்
மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி
அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே. 1517

மந்ததரம்

மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினையறுத் தின்பம் விளைத்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
அருட்டிகழ் ஞான மதுபுரிந் தானே. 1518

கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேற்
பின்னைப் பிறவி பிறிதில்லை தானே. 1519

செய்யன் கரியன் வெளியன் நற் பச்சையன்
எய்த வுணர்ந்தவர் எய்வர் இறைவனை
மைவென் றகன்ற பகடுரி போர்த்தவெங்
கைய னிவனென்று காதல்செய் வீரே. 1520.

எய்திய காலங்கள் எத்தனை யாயினுந்
தையலுந் தானுந் தனிநா யகமென்பர்
வைகலுந் தன்னை வணங்கு மவர்கட்குக்
கையிற் கருமஞ்செய் காட்டது வாமே. 1521

கண்டுகொண்டோமிரண்டுந்தொடர்ந் தாங்கொளி
பண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர்
வண்டுகொண் டாடு மலர்வார் சடையண்ணல்
நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே. 1522

தீவிரம்

அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் தோட்டத்தில்
எண்ணிக்கும் ஏழேழ் பிறவி யுணர்விக்கும்
உண்ணிற்ப தெல்லாம் ஒழிய முதல்வனைக்
கண்ணுற்று நின்ற கனியது வாகுமே. 1523

பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை யறுக்கும் வழிபட வைக்குங்
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே. 1524

தாங்குமின் எட்டுத் திசைக்குந் தலைமகன்
பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளடும்
ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத்
தூங்கொளி நீலந் தொடர்தலு மாமே. 1525

நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும்
பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவன்
அணுகிய தொன்றறி யாத வொருவன்
அணுகும் உலகெங்கு மாவியு மாமே. 1526

தீவிரதரம்

இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி
குருவென வந்து குணம்பல நீக்கித்
தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே. 1527

இரவும் பகலும் இலாத இடத்தே
குரவஞ் செய்கின்ற குழலியை உன்னி
அரவஞ்செய் யாமல் அவளுடன் சேரப்
பரிவொன்றி லாளும் பராபரை தானே. 1528

மாலை விளக்கும் மதியமும் ஞாயிறுஞ்
சாலை விளக்குந் தனிச்சுடர் அண்ணலுள்
ஞானம் விளக்கிய நாதன்என் உள்புகுந்(து)
ஊனை விளக்கி யுடனிருந் தானே. 1529

18.
அருசமயப் பிணக்கம்

ஆயத்துள் நின்ற அறுசம யங்களுங்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர்
மாயக் குழியில் விழுவர் மனைமக்கள்
பாசத்தில் உற்றுப் பதைக்கின்ற வாறே. 1530

உள்ளத்து ளேதான் கரந்தெங்கும் நின்றவன்
வள்ளல் தலைவன் மலருறை மாதவன்
பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படுங்
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே. 1531

உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்
குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்
குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே. 1532

ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்
ஆறு சமயப் பொருளும் அவனலன்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே. 1533

சிவமல்ல தில்லை யறையே சிவமாந்
தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்(கு)
அவமல்ல தில்லை அறுசம யங்கள்
தவம்வல்ல நந்திதாள் சார்ந்துய்யு நீரே. 1534

அண்ணலை நாடிய ஆறு சமயமும்
விண்ணவ ராக மிகவும் விரும்பியே
முண்ணின் றழியு முயன்றில ராதலான்
மண்ணின் றொழியும் வகையறி யார்களே. 1535

சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம்
பவகதி பாசப் பிறவியொன் றுண்டு
தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில்
அவகதி மூவரும் அவ்வகை யாமே. 1536

நூறு சமயம் உளவா நுவலுங்கால்
ஆறு சமயமவ் ஆறுட் படுவன
கூறு சமயங்கன் கொண்டநெறிநில்லா
ஈறு பரநெறி யில்லா நெறியன்றே. 1537.

கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்
சுத்த சிவமெங்குந் தோய்வற்று நிற்கின்றான்
குற்றம் தெளியார் குணங்கொண்டு கோதாட்டிப்
பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே. 1538

மயங்குகின் றாரு மதிதெளிந் தாரும்
முயங்கி யிருவினை முழைமுகப் பாச்சி
இயங்கிப் பெறுவரே லீறது காட்டிற்
பயங்கெட் டவர்க்கோர் பரநெறி யாமே. 1539

சேயன் அணியன் பிணியிலன் பேர்நந்தி
தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு
மாயன் மயக்கிய மானுட ராமவர்
காயம் விளைக்குங் கருத்தறி யார்களே. 1540

வழியரண் டுக்குமோர் வித்தது வான
பழியது பார்மிசை வாழ்தல் உறுதல்
சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்
றழிவழி வார்நெறி நாடநில் லாரே. 1541

மாதவர் எல்லாம் மாதேவன் பிரான்என்பர்
நாதம தாக அறியப்படுநந்தி
பேதஞ்செய் யாதே பிரான்என்று கைதொழில்
ஆதியும் அந்நெறி யாகிநின் றானே. 1542.

அரநெறி யப்பனை யாதிப் பிரானை
உரநெறி யாகி யுளம்புகுந் தானைப்
பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரனெறி யாவிடிற் பல்வகைத் தூரமே. 1543.

பரிசறி வானவன் பண்பன் பகலோன்
பெரிசறி வானவர் பேற்றில் திகழுந்
துரிசற நீநினை தூய்மணி வண்ணன்
அரிதவன் வைத்த அறநெறி தானே. 1544

ஆன சமயம் அதுஇது நன்றெனும்
மாய மனிதர் மயக்க மதுவொழி
கானங் கடந்த கடவுளை நாடுமின்
ஊனங் கடந்த வுருவது வாமே. 1545

அந்நெறி நாடி அமரரு முனிவருஞ்
செந்நெறி கண்டார் சிவனெனப் பெற்றார்பின்
முன்னெறி நாடி முதல்வன் அருளிலார்
சென்னெறி செல்லார் திகைக்கின்ற வாறே. 1546

உறுமா றறிவதும் உள்நின்ற சோதி
பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை
அறுமா றதுவான வங்கியு ளாங்கே
இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே. 1547

வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையங்
கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்
சுழிநடக் குந்துய ரம்மது நீக்கிப்
பழிநடப் பார்க்குப் பரவலு மாமே. 1548

வழிசென்ற மாதவம் வைகின்ற போது
பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே
வழிசெல்லும் வல்வினை யாம்திறம் விட்டிட்
டுழிசெல்லில் உம்பர் தலைவன்முன் னாமே. 1549

19.
நிராசாரம்

இமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
யமையறிந் தோமென்ப ராதிப் பிரானுங்
கமையறிந் தாருட் கலந்துநின் றானே. 1550

பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்
நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்
ஏங்கி உலகில் இருந்தழு வாரே. 1551

இருந்தழு வாரும் இயல்புகெ ட்டாரும்
அருந்தவ மேற்கொண்டங் கண்ணலை எண்ணில்
வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே. 1552
தூரறி வாளர் துணைவர் நினைப்பிலர்
பாரறி வாளர் படுபயன் றானுண்பர்
காரறி வாளர் கலந்து பிறப்பர்கள்
நீரறி வார்நெடு மாமுகி லாமே. 1553.

அறிவுடன் கூடி அழைத்தோர் தோணி
பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்
குறியது கண்டுங் கொடுவினை யாளர்
செறிய நினைக்கிலர் சேவடி தானே. 1554

மன்னும் ஒருவன் மருவு மனோமயன்
என்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள்
துன்னி மனமே தொழுமின் துணையிலி
தன்னையும் அங்கே தலைப்பட லாமே. 1555.

ஓங்காரத் துள்ளளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே. 1556.

20.
உட்சமயம்

இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமயங்க ளாறும்தன் றாளிணை நாட
அமையங் குழல்கின்ற ஆதிப் பிரானே. 1557.

ஒன்றது பேரூர் வழியா றதற்கு
என்றது போல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே. 1558.

சைவப் பெருமைத் தனிநா யகன்தன்னை
உய்ய வுயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை
மெய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய்
வையத் தலைவனை வந்தடைந் துயமினே. 1559.

சிவனவன் வைத்ததோர் தெய்வ நெறியிற்
பவனவன் வைத்த பழிவழி நாடி
இவனவன் என்ப தறியவல் லார்கட்
கவனவ னங்குள தாங்கட னாமே. 1560.

ஆமா றுரைக்கும் அறுசம யாதிக்குப்
போமாறு தானில்லை புண்ணிய மல்லதங்
காமாம் வழியாக்கும் அவ்வே றுயிர்கட்கும்
போமா றவ்வாதாரப் பூங்கொடி யாளே. 1561.

அரன்நெறி யாவ தறிந்தேனும் நானுஞ்
சிலநெறி தேடித் திரிந்தஅந் நாளும்
உரநெறி யுள்ளக் கடல்கடந் தேறுந்
தரநெறி நின்ற தனிச்சுடர் தானே. 1562.

தேர்ந்த அரனை அடைந்த சிவநெறி
பேர்ந்தவர் உன்னிப் பெயர்ந்த பெருவழி
ஆர்ந்தவர் அண்டத்துப் புக்க அருள்நெறி
போந்து புனைந்து புணர்நெறி யாமே. 1563.

ஈரு மனத்தை யிரண்டற வீசுமின்
ஊருஞ் சகாரத்தை ஓதுமின் னோதியே
வாரு மரநெறி மன்னியே முன்னியத்
தூருஞ் சுடரொளி தோன்றலு மாமே 1564.

மினற்குறி யாளனை வேதியர் வேதத்
தனற்குறி யாளனை ஆதிப் பிரான்தன்னை
நினைக்குறி யாளனை ஞானக் கொழுந்தி
னயக்குறி காணில் அரநெறி யாமே. 1565.

ஆய்ந்துண ரார்களின் ஆன்மாச் சதுர்பல
வாய்ந்துண ராவகை நின்ற அரனெறி
பாய்ந்துணர் வார் அரன் சேவடி கைதொழு
தேய்ந்துணர் செய்வதோர் இன்பமு மாமே. 1566.

சைவ சமயத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்றுண்டு
தெய்வச் சிவநெறி சன்மார்க்கஞ் சேர்ந்துய்ய
வையத் துளார்க்குவகுத்துவைத் தானே. 1567.

இத்தவம் அத்தவம் என்றிரு பேரிடும்
பித்தரைக் காணின் நகுமெங்கள் பேர்நந்தி
எத்தவ மாகிலென் எங்குப் பிறக்கிலென்
ஒத்துணர் வார்க்கொல்லை யூர்புக லாமே. 1568.

ஆமே பிரான்முகம் ஐந்தொடு மாருயிர்
ஆமே பிரானுக் கதோமுக மாறுள
தாமே பிரானுக்குந் தன்சிர மாலைக்கும்
நாமே பிரானுக்கு நரரியல் பாமே. 1569

ஆதிப்பிரானுல கேழும் அளந்தவன்
ஓதக் கடலும் உயிர்களு மாய்நிற்கும்
பேதிப் பிலாமையின் நின்ற பராசத்தி
ஆதிக்கட் டெய்வமும் அந்தமு மாமே. 1570.

ஆய்ந்தறி வார்கள் அமரர்வித் தியாதரர்
ஆய்ந்தறி யாவண்ணம் நின்ற அரனெறி
ஆய்ந்தறிந் தேனவன் சேவடி கைதொழ
ஆய்ந்தறிந் தேனிம்மை அம்மைகண் டேனே. 1571.

அறியவொண் ணாதவ் வுடம்பின் பயனை
அறியவொண் ணாத அறுவகை யாக்கி
அறியவொண் ணாத அறுவகைக் கோசத்
தறியவொண் ணாததோர் அண்டம் பதிந்ததே. 1572.


ஐந்தாம் தந்திரம் முற்றிற்று

10ம் திருமுறை

திருமந்திரம் (திருமூலர் அருளியது)
ஆறாம் தந்திரம் (1573 - 1703)

1.                                                                        சிவகுரு தரிசினம்

பத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச்
சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்துஞ் சதசத்துங் காட்டலாற்
சித்தம் இறையே சிவகுரு வாமே. 1573

பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு
நேசித்த காயம் விடிவித்து நேர்நேரே
கூசற்ற முத்தியிற் கூட்டலா நாட்டத்த
தாசற்ற சற்குரு அம்பலமாமே. 1574.

சித்திகள் எட்டோடுந் திண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும்மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே. 1575.

எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற்
சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே. 1576.

தேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே
மூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே. 1577.

சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய்
தத்தனை நல்கருள் காணா அதிமூடர்
பொய்த்தகு கண்ணான் நமரென்பர் புண்ணியர்
அத்தன் இவனென் றடிபணிவாரே. 1578.

உண்மையிற் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பார்
திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்
வண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும்
அண்ணல் அருளன்றி யாரறி வாரே. 1579.

சிவனே சிவஞானி யாதலாற் சுத்த
சிவனே யெனஅடி சேரவல் லார்க்கு
நவமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே. 1580.

குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே யுரையுணர் வற்றதோர் கோவே. 1581

சித்த யாவையுஞ் சிந்தித் திருந்திடும்
அத்தம் உணர்த்துவ தாகும் அருளாலே
சித்தம் யாவையுந் திண்சிவ மானக்கால்
அத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே. 1582.

தாநந்தி சீர்மையுட் சந்தித்த சீர்வைத்த
கோனந்தி யெந்தை குறிப்பறி வாரில்லை
வானந்தி யென்று மகிழும் ஒருவற்குத்
தானந்தி யங்கித் தனிச்சுட ராமே. 1583.

திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளா தருளும் மயக்கறும் வாய்மைப்
பொருளாய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் அருளாவிடிலோர ஒண்ணாதே. 1584.

பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர
சித்திக்கு வித்தாஞ் சிவோகமெ சேர்தலான்
முத்தியின் ஞான முளைத்தலால் அம்முளை
சத்தி யருள்தரில் தானெளி தாமே. 1585.

பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்எய்த வைத்த முதல்வனை எம்மிறை
தன்எய்துங் காலத்துத் தானே வெளிப்படு
மன்னெய்த வைத்த மனமது தானே. 1586

சிவமான ஞானந் தெளியவொண் சித்தி
சிவமான ஞானந் தெளியவொண் முத்தி
சிவமான ஞானஞ் சிவபரத்தே யேகச்
சிவமான ஞானஞ் சிவானந்த நல்குமே. 1587.

அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ்
செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை
பிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே. 1588

தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாங்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே. 1589.

2.
திருவடிப் பேறு

இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே
பசைந்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
உவந்த குருபதம் உள்ளத் துவந்ததே. 1590.

தாடந்த போதே தலைதந்த எம்மிறை
வாள்தந்த ஞான வலியையுந் தந்திட்டு
வீடந்த மின்றியே யாள்கென விட்டருட்
பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே. 1591.

தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்நந்தி
தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே. 1592.

உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
சொரூபத் திருத்தனன் சொல்லிறந் தோமே. 1593.

குரவன் உயிர்முச் சொரூபமுங் கைக்கொண்
டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி நந்தி பேச்சற்
றுருகிட என்னையங் குய்யக்கொண் டானே. 1594.

பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே
மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்
காச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டு
வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே. 1595.

இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்
பதிவித்த பாதப் பராபரன் நந்தி
கதிவைத்த வாறும் மெய்காட் டியவாறும்
விதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே. 1596.

திருவடி வைத்தென் சிரத்துருள் நோக்கிப்
பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்
குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக்
கருவழி வாற்றிடக் கண்டுகொண் டேனே. 1597.

திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்
திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்
திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே. 1598.

மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை
மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்
பால்வைத்த சென்னிப் படரொளி வானவன்
தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே. 1599.

கழலார் கமலத் திருவடி என்னும்
நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா
அழல்சேரும் அங்கியுள் ஆதிப் பிரானுங்
குழல்சேரும் என்னுயிர்க் கூடுங் குலைத்தே. 1600.

முடிமன்ன ராகிமூ வுலகம தாள்வர்
அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற தேவர்கள் ஈசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே. 1601.

வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தே னவ்வேதத்தின் அந்தமே. 1602

அடிசார லாம்அண்ண ல்பாத மிரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே. 1603

மந்திரமாவதும் மாமருந் தாவதுந்
தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்
சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்தன் இணையடி தானே. 1604

3.
ஞாதுரு ஞான ஞேயம்

நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி யதநிலை நிற்கவே
நீங்கா அமுத நிலைபெற லாமே. 1605

ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவறி வாரே. 1606

தானென் றவனென் றிரண்டாகும் தத்துவந்
தானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டு
தானென்ற பூவை யவனடி சாத்தினால்
நானென் றவனென்கை நல்லதொன் றன்றே. 1607.

வைச்சன வாறாறு மாற்றியெனவைத்து
மெச்சப் பரன்றன் வியாத்துவ மேலிட்டு
நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்
அச்சங் கெடுத்தென்னை யாண்டனன் நந்தியே. 1608

முன்னை யறிவறியாதஅம் மூடர்போற்
பின்னை யறிவுஅறி யாமையைப் பேதித்தான்
தன்aன யறியப் பரனாக்கித் தற்சிவத்து
தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே. 1609

காணாத கண்ணுடன் கேளாத கேள்வியுங்
கோணாத போகமுங் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாதாந்த போதமுங்
காணா யெனவந்து காட்டினன் நந்தியே. 1610

மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைந் கருமமும் முன்னுமே. 1611.

முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால்
வைத்த கலைகால் நான்மடங் கால்மாற்றி
உய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே
பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே. 1612.

மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி
பாலித்த முத்திரை பற்றும் பரஞானி
ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே. 1613

4.
துறவு

இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்
துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
கறப்பதி காட்டும் அமரர் பிரானே. 1614

பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே
மறந்து பலஇருள் நீங்க மறைந்து
சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத்
துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே. 1615

அறவன் பிறப்பிலி யாரும் இலாதான்
உறைவது காட்டகம் உண்பது பிச்சை
துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே 1616

நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும்
நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு
நெறியின் நெருஞ்சில்முட் பாயகி லாவே. 1617

கேடும் கடமையுங் கேட்டுவந் தைவரும்
நாடி வளைந்தது நான்கட வேனலேன்
ஆடல் விடையுடை அண்ணல் திருவடி
கூடுந் தவஞ்செய்த கொள்கையன் தானே. 1618

உழவன் உழஉழ வானம் வழங்க
உழவன் உழவினிற் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண்ணொக்கும் என்றிட்
டுழவன் அதனை யுழவொழிந் தானே. 1619

மேல்துறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
நாள்துறந் தார்க்கவன் நண்ப னவாவிலி
கார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்துறந் தார்க்கே பதஞ்செய லாமே. 1620

நாகமும் ஒன்று படம்ஐந்து நாலது
போகமுட் புற்றிற் பொருந்தி நிறைந்தது
ஆக மிரண்டும் படம்விரித் தாட்டொழிந்
தேகப் படம்செய் துடம்பிட மாமே. 1621

அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும்
இவன்றா னெனநின் றெளியனும் அல்லன்
சிவன்றாள் பலபல சீவனு மாகும்
நயன்றான் வரும்வழி நாமறி யோமே. 1622

தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும்
ஆம்பற் குழலியின் கஞ்சுளிப் பட்டது
வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற்
கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே. 1623

5.
தவம்

ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே. 1624

எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமுஞ்
செம்மா தவத்தின் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவர்க் கல்லா(து)
இம்மா தவத்தின் இயல்பறி யாரே. 1625

பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகிய மாதவஞ் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே. 1626

இருந்து வருந்தி எழிறவஞ் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
இருந்திந் திரனே யெவரே வரினுந்
திருந்துந்தஞ் சிந்தை சிவனவன் பாலே. 1627

கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே. 1628

பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனை எம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும்
மன்னெய்த வைத்த மனமது தானே. 1629

அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே
அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே. 1630

சாத்திரம் ஓதுஞ் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே. 1631

தவம்வேண்டு ஞானந் தலைபட வேண்டில்
தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில்
தவம்வேண்டா மச்ச கசமார்க்கத் தோர்க்கு
தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே. 1632

6.
தவ நிந்தை

ஓதலும் வேண்டாம் உயிர்க்குயி ருள்ளுற்றாற்
காதலும் வேண்டாமெய்க் காய மிடம்கண்டாற்
சாதலும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற்
போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே. 1633.

கத்தவும் வேண்டாங் கருத்தறிந் தாறினாற்
சத்தமும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற்
சுத்தமும் வேண்டாந் துடக்கற்று நிற்றலாற்
சித்தமும் வேண்டாஞ் செயலற்றிருக்கிலே. 1634

விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யறஞ் செய்வார்
விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே. 1635

கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவஞ்செய்வ தேதவம் இவைகளைந்
தூடிற் பலவுல கோரெத் தவரே. 1636

மனத்துரை மாகடல் ஏழுங் கைநீந்தித்
தவத்திடை யாளர்தஞ் சார்வத்து வந்தார்
பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின்
முகத்திடை நந்தியை முந்தலு மாமே. 1637

மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டற வீர்த்துப்
புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால்
தவத்திடை யாறொளி தன்னொளி யாமே. 1638

ஒத்து மிகவு நின்றானை யுரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கும் முனிவன் னெனும்பதஞ்
சத்தான செய்வது தான்தவந் தானே. 1639

இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி
மலர்தொட்டுக் கொண்டேன் வரும்புனல் காணேன்
தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளந்
தலைதொட்டுக் கண்டேன் தவங்கொண்ட வாறே. 1640

படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்
கிடரடை யாவண்ணம் ஈசன் அருளும்
இடரடை செய்தவர் மெய்த்தவ நோக்கில்
உடரடை செய்வ தொருமனத் தாமே. 1641

ஆற்றிக் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே. 1642

பழுக்கின்ற வாறும் பழமுண்ணு மாறுங்
குழக்கன்று துள்ளியக் கோணியைப் பல்காற்
குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள்
இழுக்காது நெஞ்சத் திடவொன்று மாமே. 1643

சித்தஞ் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால்
சித்தஞ் சிவமாக வேசித்தி முத்தியாஞ்
சித்தஞ் சிவமாதல் செய்தவப் பேறே. 1644

7.
அருளுடைமையின் ஞானம் வருதல்

பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்
பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்
பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு
பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே. 1645

தமிழ்மண் டலம்ஐந்துந் தாவிய ஞானம்
உமிழ்வது போல உலகந் திரிவார்
அவிழு மனமும்எம் ஆதியறிவுந்
தமிழ்மண் டலம்ஐந்துந் தத்துவ மாமே. 1646

புண்ணிய பாவம் இரண்டுள பூமியில்
நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர்அறத் தப்புறத்
தண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வீரே. 1647

முன்னின் றருளு முடிகின்ற காலத்து
நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே. 1648

சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர்
சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர்
சிவனரு ளால்வினை சேரகி லாமை
சிவனருள் கூடின்அச் சிவலோக மாமே. 1649

புண்ணியன் எந்தை புனிதன் இணையடி
நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது
மண்ணவ ராவதும் வானவர் ஆவதும்
அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே. 1650

காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தே ரேறி மயங்கு மவையுணர்
நேயத்தே ரேறி நிமலன் அருள்பெற்றால்
ஆயத்தே ரேறி யவனிவ னாமே. 1651

அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும்
அவ்வுல கத்தே யருந்தவர் நாடுவர்
அவ்வுல கத்தே யரனடி கூடுவர்
அவ்வுல கத்தே யருள்பெறு வாரே. 1652

கதிர்கண்ட காந்தங் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாஞ்
சதிகொண்ட சாக்கி யெரியின் வடிவாம்
எரிகொண்ட ஈசன் எழில்வடி வாமே. 1653.

நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத்
தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று
கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல்ல
வீடும் அளவும் விடுகின் றிலெனே. 1654

8.
அவ வேடம்

ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந்
தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே. 1655

ஞானமில் லேர்வேடம் பூண்டிருந்த நாட்டிடை
ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்
மான நலங்கெடும் வையகம் பஞ்ச்மாம்
ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே. 1656

இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள்ள
நன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்காம்
என்ப இறைநாடி நாடோறும் நாட்டினின்
மன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே. 1657

இழிகுலத் தோர்வேடம் பூண்பர்மே லெய்த
வழிகுலத் தோர்வேடம் பூண்பர்தே வாகப்
பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்
கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே. 1658

பொய்த்தவஞ் செய்வார் புகுவர் நரகத்துப்
பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்
பொய்த்தவம்மெய்த்தவம் போகத்துட்போக்கியஞ்
சத்திய ஞானத்தால் தங்குந் தவங்களே. 1659

பொய்வேடம் பூண்பர் போசித்தல் பயனாக
மெய்வேடம் பூண்போர்மிகு பிச்சைகைக்கொள்வர்
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்
உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே. 1660

9.
தவவேடம்

தவமிக் கவரே தலையான வேடர்
அவமிக் கவரே யதிகொலை வேடர்
அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந்
தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே. 1661

பூதி யணிவது சாதன மாதியிற்
காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை
ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந்
தீதில் சிவயோகி சாதனந் தேரிலே. 1662.

யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி
தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையதொன்று
றாகத்து நீறனி யாங்கக் கபாலஞ்
சீகந்த மாத்திரை தின்பிரம் பாகுமே. 1663.

காதணி குண்டலங் கண்டிகை நாதமும்
ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை
ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம்
ஏதமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே. 1664

10.
திருநீறு

நூலுஞ் சிகையும் உணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரமுயிர்
ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே. 1665

கங்காளன் பூசுng கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே. 1666

அரசுட னாலத்தி யாகும்அக் காரம்
விரவுகனலில் வியனுரு மாறி
நிரவயன் நின்மலன் தாள்பெற்ற நீதர்
உருவம் பிரமன் உயர்குலம் ஆமே. 1667

11.
ஞான வேடம்

ஞானமி லார்வேடம் பூண்டும் நரகத்தர்
ஞானமுள்ளார்வேடம்இன்றெனில்நன்முத்தர்
ஞானமுளதாக வேண்டுவோர் நக்கன்பால்
ஞானமுள வேட நண்ணிநிற் பாரே. 1668.

புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை
நன்ஞானத்தோர்வேடம் பூணார் அருள்நண்ணித்
துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர்
பின்ஞானத் தோரொன்றும் பேசுகில்லாரே. 1669.

சிவஞானி கட்குஞ் சிவயோகி கட்கும்
அவமான சாதனம் ஆகாது தேரில்
அவமா மவர்க்கது சாதன நான்கும்
உவமான மில்பொருள் உள்ளுற லாமே. 1670

சுத்தித் திரிவர் கழுவடி நாய்போற்
கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்
ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே
செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே. 1671

அடியா ரவரே யடியா ரலாதார்
அடியாரு மாகார்அவ் வேடமு மாகார்
அடியார் சிவஞான மானது பெற்றோர்
அடியா ரலாதார் அடியார்கள் அன்றே. 1672

ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாந்
தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமே
ஆனவவ் வேடம் அருண்ஞான சாதனம்
ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே. 1673

ஞானத்தின் னாற்பத நண்ணுஞ் சிவஞானி
தானத்தில் வைத்த தனியால யத்தனாம்
மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாம்
ஏனைத் தவசி இவனென லாகுமே. 1674

தானன்ற தன்மையுந் தானவ னாதலும்
ஏனைய வச்சிவ மான இயற்கையுந்
தானுறு சாதக முத்திரை சாத்தலு
மேனமும் நந்தி பதமுத்தி பெற்றதே. 1675

12.
சிவ வேடம்

அருளால் அரனுக் கடிமைய தாகிப்
பொருளாந் தனதுடற் பொற்பதி நாடி
இருளான தின்றி யிருஞ்செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவவேடத் தோரே. 1676

உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா
உடல்கழன் றால்வேடம் உடனே கழலும்
உடலுயிர் உண்மையென் றோர்ந்துகொள்ளாதார்
கடலில் அகல்பட்ட கட்டையொத் தாரே. 1677

மயலற் றிருளற்று மாமன மற்றுக்
கயலுற்ற கண்ணியர் கையிணைக் கற்றுத்
தயலற் றவரோடும் தாமே தாமாகிச்
செயலற் றிருப்பார் சிவவேடத் தாரே. 1678

ஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடங்கொண் டென்செய்வீர் வேண்டாமனிதரே
நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்
தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே. 1679

13.
அபக்குவன்

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே. 1680

மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்
வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே. 1681.

ஏயெனில் என்னென மாட்டார் பிரசைகள்
வாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுந்
தாய்முலை யாவ தறியார் தமருளோர்
ஊனிலை செய்யும் உருவிலி தானே. 1682

வாயென்று சொல்லி மனமொன்று சிந்தித்து
நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
நீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே. 1683

பஞ்சத் துரோகத்திப் பாதகர் தம்மை
யஞ்சச் சமயத்தோர் வேந்தன் அருந்தண்டம்
விஞ்சச்செய் திப்புவி வேறே விடாவிடிற்
பஞ்சத்து ளாய்புவி முற்றும்பா ழாகுமே. 1684

தவத்திடை நின்றவர் தாமுண்ணும் கன்மஞ்
சிவத்திடை நின்றது தேவர் அறியார்
தவத்திடை நின்றறி யாதவர் எல்லாம்
பவத்திடை நின்றதோர் பாடது வாமே. 1685

கன்றலுங் கருதலுங் கருமஞ் செய்தலும்
தின்றலுஞ் சுவைத்தலுந் தீமைசெய்தலும்
பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும்
என்றிவை இறைபால் இயற்கை அல்லவே. 1686

விடிவ தறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவு மாட்டார்
கடியதோ ருண்ணிமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கது வாமே. 1687

வைத்த பசுபாசம் மாற்று நெறிவைகிப்
பெத்த மறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத்
தத்துவ முன்னித் தலைப்படா தவ்வாறு
பித்தான சீடனுக் கீயப் பெறாதானே. 1688

மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகையோரான்
துன்னிய காமாதி தோயும் தொழில்நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான்
அன்னிய னாவன் அசற்சீட னாமே. 1689

14.
பக்குவன்

தொழுதறி வாளர் கருதிகண் ணாகப்
பழுதறியாத பரம குருவை
வழியறி வார்நல் வழியறி வாளர்
அழிவறி வார்மற்றை யல்லா தவரே. 1690

பதைதொழிந் தேன்பர மாவுனை நாடி
யதைத்தொழிந் தேன்இனி யாரொடுங் கூடேன்
சிதைத்தடி யேன்வினை சிந்தனை தீர
உதைத்துடை யாயுகந் தாண்டரு ளாயே. 1691

பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை
விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்
சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி
இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே. 1692

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருளுடல் ஆவி யுடன்ஈக
எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று
தெள்ளி யறியச் சிவபதந் தானே. 1693

சோதி விசாகந் தொடர்ந்திரு தேள்நண்டு
ஓதிய நாளே உணர்வது தானென்று
நீதியுள் நேர்மை நினைந்தவர்க் கல்லது
ஆதியும் ஏதும் அறியகி லானே. 1694

தொழிலார மாமணித் தூய்தான சிந்தை
எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே
விழலார் விறலாம் வினையது போகக்
கழலார் திருவடி கண்டரு ளாமே. 1695

சாத்திக னாய்ப்பர தத்துவவந் தானுன்னி
ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே
ஆர்த்த பிறவியி னஞ்சி யறநெறி
சாத்தவல் லானவன் சற்சீட னாமே. 1696

சத்தும் அசத்துமெவ் வாறெனத் தானுன்னிச்
சித்தை யுருக்கிக் சிவனருள் கைகாட்டப்
பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்தச்
சத்தியில் இச்சை தகுவோன்சற் சீடனே. 1697

அடிவைத் தருளுதி யாசானின் றுன்னா
அடிவைத்த மாமுடி மாயப் பிறவி
அடிவைத்த காய அருட்சத்தி யாலே
அடிபெற்ற ஞானத்த னாசற்று ளோனே. 1698

சீராரு ஞானத்தின் இச்சை செலச்செல்ல
வாராத காதல் குருபரன் பாலாகச்
சாராத சாதக நான்குந்தன் பாலுற்றோன்
ஆராயும் ஞானத்த னாமடி வைக்கவே. 1699

உணர்த்து மதிபக் குவர்க்கே யுணர்த்தி
இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக்
குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண்
டுணர்த்துமி னாவுடை யாள்தன்னை யுன்னியே. 1700

இறையடி தாழ்ந்தை வணக்கமும் எய்திக்
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்
சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ
டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே. 1701

வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்
வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து
வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே
தாழ்க்குந் தலையினோன் சற்சீட னாமே. 1702

சற்குணம் வாய்மை தயாவிவே கந்தண்மை
சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே
சிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல்
அற்புத மேதோன்ற லாகுஞ்சற் சீடனே. 1703

ஆறாம் தந்திரம் முற்றிற்று

No comments:

Post a Comment